ஜாதி மோதல்களை தூண்டும் எடப்பாடி: தேவந்திர குல வேளாளர் சமூகத்தினர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு..!
Top Tamil News September 12, 2025 02:48 AM

தமிழ்நாடு தேவேந்திர குல மக்கள் இயக்கத்தின் தலைவர் குமுளி ராஜ்குமார் வெளியிட்ட அறிக்கை: தேர்தல் களம் நெருங்குகின்ற நேரத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் அறிக்கையாக வெளியிடும் எடப்பாடி பழனிசாமியை தேவேந்திர குல மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் வாக்கு சேகரிக்க வருகிற பொழுது எல்லையிலேயே எடப்பாடியை நிறுத்தி வழி அனுப்புவோம்.

எடப்பாடி பழனிசாமி நீங்கள் உள் அரசியல் செய்து கொள்ளுங்கள், மாறாக தமிழ்குடி மக்களுக்குள் ஜாதிய மோதலை தூண்டி விட்டு குளிர் காய்வது நல்லதல்ல. மதுரை விமான நிலையம் அனேக தேவேந்திர குல மக்கள் வசிக்கும் பகுதியாகும். விமான நிலையத்திற்கு சொந்தமான பெருவாரியான இடங்கள் தேவேந்திர குல மக்களின் இடங்களாகும். மதுரை பன்னாட்டு விமான நிலைய விவகாரத்தில் நீங்கள் ஒருதலைபட்சமாக ஜாதிய வன்மத்துடன் செயல்பட்டு ஒட்டு மொத்த தமிழகமெங்கிலும் ஜாதிய கலவரத்தை தூண்டி விடும் எடப்பாடி பழனிசாமியை வன்மையாக கண்டிக்கின்றோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இரு சமூகத்தினர் இடையே பிரிவினையை தூண்டி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுவதாக கூறி வேளாளர் சமூகத்தினர் பல்வேறு பகுதிகளிலும் கண்டன சுவரெட்டிகளை ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனுடைய நினைவிடத்தில் அனைத்து கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் இன்று மரியாதை செலுத்தி வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தென் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.