அமெரிக்காவை அடுத்து கதவை மூடிய கனடா.. 10ல் 8 இந்திய மாணவர்களின் விசா நிராகரிப்பு.. ஜெர்மனி மட்டுமே ஒரு ஆறுதல்.. இந்திய மாணவர்கள் சரியான முடிவெடுக்க வேண்டிய நேரம்.. தாய்நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமா?
Tamil Minutes September 12, 2025 04:48 AM

கனடாவில் வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு, நிலைமை மிகவும் கடினமாகி வருகிறது. கனடாவின் குடிவரவுத் துறை வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்கள் இதை தெளிவாக காட்டுகின்றன.

இந்த ஆண்டு கனடாவில் மாணவர் விசா விண்ணப்பங்களில் 62% நிராகரிக்கப்பட்டுள்ளன, இது கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம். இந்திய மாணவர்கள் இதில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 10 இந்திய விண்ணப்பங்களில் 8 நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு, கனடாவின் மொத்த சர்வதேச மாணவர்களில் 41% பேர் இந்தியர்களாக இருந்தனர். ஆனால், இன்று நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது.

இந்த சரிவுக்கு பின்னால் பல காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக டொராண்டோ, வான்கூவர் போன்ற பெரிய நகரங்களில் வீட்டு வசதி பற்றாக்குறை நிலவுகிறது. இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பிற்காக பெரும்பாலான வீடுகளை ஆக்கிரமித்து கொள்வதால் உள்ளூர் மக்களுக்கு வீடு கிடைக்கவில்லை.

மேலும் விண்ணப்பங்களில் உள்ள பிழைகள் மற்றும் மோசடி குறித்த அச்சங்கள் அதிகமாகி உள்ளது. இதன் காரணமாக, கனடா அரசாங்கம் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இப்போது ஒரு மாணவர் தனக்கு விசா வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 21,000 கனடிய டாலர் நிதி ஆதாரத்தை காட்ட வேண்டும். மாணவர்கள் தங்கள் படிப்பு திட்டம் மற்றும் ஆவணங்களை மிக துல்லியமாகச் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு சிறிய பிழை கூட விண்ணப்ப நிராகரிப்புக்கு வழிவகுக்கும்.

படிப்பை முடித்த பிறகு பணிபுரியும் அனுமதியை பெற, மாணவர்கள் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழியில் கடுமையான தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். அங்கீகரிக்கப்படாத கல்லூரிகளின் படிப்புகள் பணி அனுமதிக்கு இனி தகுதி பெறாது.

கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்திய மாணவர்களுக்குக் கதவுகளை மூடும் நிலையில், ஜெர்மனி ஒரு புதிய வாய்ப்பை திறந்துள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட ஜெர்மனி, இந்திய திறமைசாலிகள் மற்றும் மாணவர்களுக்கு வேலை மற்றும் படிப்பு விசாக்களை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வழங்குகிறது.

ஜெர்மனியில் தற்போது 60,000 இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர், இது அந்நாட்டில் உள்ள சர்வதேச மாணவர் குழுக்களில் மிகப்பெரியது. ஜெர்மனிக்கு அதிக திறன்கொண்ட பணியாளர்கள் தேவைப்படுவதால், பல இந்தியர்கள் படிப்புக்கு பிறகு அங்கேயே தங்கி வேலைவாய்ப்புகளை பெறுகின்றனர்.

ஜெர்மனியில் வாழ்க்கை எளிதானது அல்ல. அந்நாட்டில் சில குறிப்பிட்ட துறைகளில் மட்டுமே வேலைவாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் போன்ற துறைகளில் வேலை கிடைப்பது எளிது. ஆனால், மொழி ஒரு பெரிய தடையாக உள்ளது. மேலாண்மை ஆலோசனை போன்ற துறைகளில் பணிபுரிய ஜெர்மன் மொழி அறிவு கட்டாயமாகிறது.

ஜெர்மனியில் பணிபுரியும் இந்தியர்கள், வெளிப்படையாக கூறுகையில், ஊடகங்களில் காட்டப்படுவது போல் வேலை கிடைப்பது எளிதானதல்ல. பகுதிநேர வேலைகள் கூட கிடைப்பது கடினம், மேலும் ஜெர்மன் மொழித் திறன் இல்லாதவர்களுக்கு சவால்கள் அதிகம் என்று கூறியுள்ளனர்.

மொத்தத்தில் அமெரிக்காவில், கனடாவில் இந்திய மாணவர்களுக்கான வாய்ப்புகள் குறையும் நிலையில், ஜெர்மனி ஒரு மாற்றாக உருவெடுத்துள்ளது. ஆனால், ஜெர்மனிக்கு செல்ல விரும்பும் மாணவர்கள், அங்குள்ள உண்மை சவால்களும் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே இந்திய மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயின்று இந்தியாவில் வேலை பார்த்து, இந்தியாவை முன்னேற்ற பாடுபட வேண்டும் என்பதே பலருடைய ஆசையாக உள்ளது.

Author: Bala Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.