கடந்த 75 ஆண்டுகளாக இந்தியா பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்களை எதிர்கொண்டுள்ளது. காஷ்மீர் விவகாரம், அண்டை நாடான பாகிஸ்தான் உடனான பதற்றங்கள் என பல பிரச்சனைகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. ஆனால் சமீப காலங்களில், இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் திடீரென ஏற்படும் அரசியல் மாற்றங்கள், ஆட்சிக் கவிழ்ப்புகள் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை ஆகியவை ஒரு புதிய அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளன. இந்த நிகழ்வுகள் அனைத்தும் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றனவா? அடுத்த இலக்கு இந்தியாவா? என்ற கேள்விகள் எழுகின்றன.
சமீப காலமாக, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் தொடர்ச்சியாக ஆட்சி கவிழ்ப்புகள் நடந்துள்ளன. இது தற்செயலான நிகழ்வு அல்ல. இவை அனைத்தும் ஒரு பொதுவான போக்குடன் அரங்கேற்றப்படுகின்றன.
இந்த நாடுகளில், ஊழலுக்கு எதிரான இளைஞர்களின் திடீர் போராட்டங்கள் வலுப்பெற்று, இறுதியில் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கின்றன. இந்த போராட்டங்கள், நாடாளுமன்றம் மற்றும் அரசு அலுவலகங்கள் சூறையாடப்படுவதுடன், பொது சொத்துகளுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன.
இந்த அரசியல் மாற்றங்கள், அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளின் ‘டீப் ஸ்டேட்’ அல்லது உளவுத்துறை தலையீடுகளின் விளைவாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. இந்த நாடுகள், தங்கள் புவிசார் அரசியல் நலன்களை பாதுகாக்க, அண்டை நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, சமூக ஊடகங்கள் இந்த போராட்டங்களை ஒருங்கிணைப்பதிலும், மக்கள் மத்தியில் அதிருப்தியை தூண்டுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. நிர்பயா சம்பவம் உள்பட பல நிகழ்வுகள், இந்த சமூக ஊடக பிரச்சாரங்களின் சக்தி தெளிவாக தெரிகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் வேலைக்கு செல்லாத நாட்களில், அவர்களை எளிதாக திரட்டுவதற்கு இது ஒரு யுக்தியாக பயன்படுத்தப்படுகிறது.
ஓர் ஆக்கப்பூர்வமான தலைமையை நீக்கிய பிறகு, அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நபர் திடீரென இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக நியமிக்கப்படுகிறார். இந்த தலைவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டு சக்திகளின் பொம்மைகளாக செயல்படுவார்கள் என்று நம்பப்படுகிறது.
பாகிஸ்தானில் 2018-ல் நவாஸ் ஷெரீப்பின் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர், இம்ரான் கான் ஆட்சிக்கு வந்தார். இம்ரான் கான் சீனா மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கமாக இருந்ததால், அவர் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். தற்போது, அமெரிக்கா ஆதரவு ஷெரீப் ஆட்சி நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான், பலூச் பகுதியை அமெரிக்காவுக்கு அடகு வைத்து, அதற்கு பதிலாக இந்தியாவுக்கு எதிரான பாதுகாப்பு உதவிகளை பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மாலைத்தீவுகள் பகுதியிலும் 2018-ல் நடைபெற்ற தேர்தலில், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்த மொய்சு வெற்றிபெற்றார். இருப்பினும், சீனா உதவிக்கு வராததால், மாலத்தீவுகள் மீண்டும் இந்தியாவின் உதவியை நாடியது. தற்போது இந்தியாவின் நட்பு நாடாக மாலத்தீவுகள் மாறிவிட்டது.
2021-ல் மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்டு, ராணுவ ஆட்சி நிறுவப்பட்டது. இந்த ஆட்சி, சீனாவுக்கு ஆதரவானது என கூறப்படுகிறது. ஆனால், ராணுவ அரசுக்கு எதிராக பல உள்நாட்டு ஆயுத குழுக்கள் எழுந்துள்ளதால், மியான்மர் மூன்று பிரிவுகளாக பிளவுபடும் அபாயம் உள்ளது.
2008 வரை உலகிலேயே ஒரே இந்து நாடாக இருந்த நேபாளம், பின்னர் கம்யூனிச நாடாக மாறியது. தற்போது அங்குள்ள கம்யூனிஸ்ட் தலைவர் கே.பி. சர்மா ஒலி, சீனாவுக்கு ஆதரவானவராக அறியப்பட்டார். அவரது ஆட்சியில், ராமர் அயோத்தியை சேர்ந்தவர் அல்ல, நேபாளத்தைச் சேர்ந்தவர் என்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் வெளியிட்டார். அண்மையில், அவர் சீனாவுக்கு சென்று வந்த பிறகு, அவரது ஆட்சி கவிழ்ந்துள்ளது.
இந்தியா, இந்த உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் கவனமாக செயல்பட வேண்டும். நமது வெளிநாட்டுக் கொள்கை மற்றும் அண்டை நாடுகளுடனான உறவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றன. வெளிநாட்டு சக்திகளால் தூண்டிவிடப்படும் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை தடுக்க, சமூக ஊடக தளங்களை முறையாக கட்டுப்படுத்துவது அவசியம்.
இந்தியா தனது அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேண வேண்டும். கடன் கொடுத்து சிக்கலில் மாட்டும் சீனாவை போல் அல்லாமல், இந்தியா தனது உதவியை மானியமாகவும், திட்டங்களாகவும் வழங்குவது அவசியம்.
2014-ல் பிரதமர் மோடி முதல்முறையாக பிரதமர் பதவியேற்றபோது, அண்டை நாட்டு தலைவர்களைப் பதவியேற்பு விழாவிற்கு அழைத்தது ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட முடிவாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் உட்பட அனைத்து சார்க் நாடுகளையும் அவர் அழைத்ததன் மூலம், இந்தியாவின் நட்பு மனப்பான்மை வெளிப்பட்டது. ஆனால் அப்போது வைகோ இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சவால்களை எதிர்கொள்ள, இந்தியா மிகுந்த விழிப்புணர்வுடன் இருந்து வருகிறது,. வெளியுறவுக் கொள்கையில் நிதானம், உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கம், மற்றும் அண்டை நாடுகளுடனான நல்லுறவு போன்ற நடவடிக்கைகள் மூலம், இந்த புவிசார் அரசியல் விளையாட்டிலிருந்து இந்தியா தன்னை தற்காத்து கொண்டிருக்கிறது.
இலங்கை, வங்கதேசம், நேபாளம் போல் இந்தியாவில் அவ்வளவு சீக்கிரம் புரட்சியை தூண்டிவிட முடியாது. அந்நிய சக்திகள் பலமுறை முயற்சி செய்து மோடியின் ராஜ தந்திரத்தால் அவை தடுக்கப்பட்டன என்றும் கூறப்படுகிறது.
Author: Bala Siva