பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சியில் இருந்து அன்புமணியை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவருக்கு இருமுறை நோட்டீஸ் அனுப்பியும் உரிய பதில் அளிக்காததால், அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவரே ஏற்றுக்கொண்டதாக கருதப்பட்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்தார்.
“இந்த முடிவு சற்று வருத்தமானதாக இருந்தாலும் கட்சியின் நலனுக்காக மேற்கொள்ள வேண்டிய கட்டாயமாக இது இருந்தது” என்றார். பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து கூட அன்புமணி நீக்கப்பட்டுள்ள நிலைமை, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இன்று கடலூரில் தனது ஆதரவு நிர்வாகிகளை உடனடியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார் அன்புமணி. மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றுள்ளனர். ராமதாஸ் எடுத்த முடிவை எதிர்த்து அன்புமணி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிய வருகிறது. பாமகவில் இருந்து வெளியேற்றம், முக்கிய தலைவர்களில் ஒருவரை மையமாகக் கொண்டிருப்பதால், இது கட்சியின் வளர்ச்சி பாதையில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.