நாளை நான்காம் கட்ட நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்..எந்த எந்த இடங்கள் தெரியுமா?
Seithipunal Tamil September 14, 2025 02:48 AM

மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நாளை  சனிக்கிழமை “நலம் காக்கும் ஸ்டாலின்“ திட்ட முகாம் நான்காம் கட்டமாக நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைத்தார்.அந்தவகையில் 02.08.2025 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியில் முதல் மருத்துவ முகாமினை தேனாம்பேட்டை மண்டலம், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மண்டலத்திற்கு ஒரு மருத்துவ முகாம் வீதம் முதற்கட்டமாக 02.08.2025 அன்று சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில், இரண்டாம் கட்டமாக 23.08.2025 அன்று ஆலந்தூர் மண்டலம், ஏ.ஜெ.எஸ். நிதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நான்காம் கட்டமாக 30.08.2025 அன்று நடைபெற்றது .

இதன் தொடர்ச்சியாக, மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நாளை சனிக்கிழமை “நலம் காக்கும் ஸ்டாலின்“ திட்ட முகாம் நான்காம் கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த மருத்துவ முகாம்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதயவியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், இந்தியமுறை மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம் மற்றும் ஸ்கேன் பரிசோதனை ஆகிய 17 துறைசார் நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகள், அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனை, முழுமையான உடல் ஆரோக்கிய பரிசோதனை, , ஆரம்ப புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை ஆகிய மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.

மேலும், முதல்-அமைச்சரின் விரிவாக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சாரம் போன்ற இணைச் சேவைகளும் வழங்கப்படுகிறது.திட்ட மருத்துவ முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.