தமிழகத்தில் லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு முக்கியமான உணவுப் பாதுகாப்பு ஆதாரமாக நியாய விலைக் கடைகள் (ரேஷன் கடைகள்) செயல்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் 2.2 கோடி குடும்ப அட்டைகள் மூலம் சுமார் 7 கோடி மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
மொத்தம் 33,222 ரேஷன் கடைகள் மூலம் நியாய விலையில் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்கப்படும் திட்டமும் செயல்படுகிறது.
தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை, இயற்கை பேரிடர் நிவாரணத் தொகை, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல அரசு நலத்திட்டங்கள் ரேஷன் அட்டை அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இதனால் ரேஷன் அட்டை என்பது வெறும் நிவாரண அட்டையாக மட்டுமல்லாமல், முக்கியமான அடையாள ஆவணமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
ரேஷன் அட்டையில் பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் போன்ற பணிகளுக்காக ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வசதி உள்ளதாலும், சில சமயங்களில் அதிகாரிகள் அவற்றை நிராகரிப்பதைக் காண முடிகிறது.
இதனை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையில், தமிழக அரசு சார்பாக ரேஷன் அட்டை திருத்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான திருத்த முகாம் செப்டம்பர் 13ம் தேதி சனிக்கிழமையில் இன்று நடைபெற உள்ளது.
இந்த முகாமில், முகவரி மாற்றம், புதிய உறுப்பினர்களின் பெயர் சேர்ப்பு,பெயர் நீக்கம், தொலைபேசி எண் திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பம், நகல் அட்டைக்கான மனு, அட்டை வகை மாற்றம் போன்ற அனைத்து தொடர்புடைய விண்ணப்பங்களும் பெறப்பட்டு, பரிசீலனை மற்றும் தீர்வுகள் வழங்கப்படும்.
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளன.
மேலும், மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க ரேஷன் அட்டை முக்கிய ஆவணமாக இருப்பதால், இதுவரை அட்டை இல்லாதவர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொண்டு புதிய குடும்ப அட்டைக்காக விண்ணப்பிக்கலாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் ஒரே நாளில் தங்களது தேவைகளை தீர்த்து கொள்ளும் இந்த வாய்ப்பை பொதுமக்கள் தவற விடக் கூடாது” என தமிழ்நாடு பொதுவிநியோகத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.