'மேக்ஸி கேப்' வேன்களை மினி பேரூந்துகளாக இயக்க தமிழக அரசு முடிவு!
Seithipunal Tamil September 15, 2025 02:48 AM

தமிழக அரசு, பொதுமக்கள் குறிப்பாக மலை மற்றும் ஊரகப் பகுதிகளில் போக்குவரத்து சிரமங்களை குறைக்க புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதன்படி, ‘மேக்ஸி கேப்’ எனப்படும் வேன் வாகனங்களை சிற்றுந்துகளாக மாற்றி இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூன் மாதத்தில் சென்னையில் தனியார் சிற்றுந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் போதிய ஆபரேட்டர்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் அந்தத் திட்டம் முழுமையாக செயல்படவில்லை. தற்போது, 25 கிலோமீட்டர் சுற்றளவில் ‘மேக்ஸி கேப்’ வாகனங்களை சிற்றுந்துகளாக இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த குறைந்தது 5,000 சிற்றுந்துகள் தேவைப்படுகின்றன. ஆனால், இதுவரை சுமார் 1,000 ஆபரேட்டர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். இதனை சமாளிக்க முதல்கட்டமாக 2,000 தனியார் ‘மேக்ஸி கேப்’ வாகனங்களை 12 முதல் 16 இருக்கைகளுடன் சிற்றுந்துகளாக மாற்றி இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும், எந்த பகுதிகளில் சிற்றுந்து வசதிகள் அதிகம் தேவைப்படுகின்றன, பயணிகளின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வது போன்ற விஷயங்களை ஆய்வு செய்து விரிவான அறிக்கை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்குமாறு தலைமைச் செயலர் உத்தரவிட்டு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த முயற்சியின் மூலம் மலைப்பகுதி மற்றும் ஊரக மக்களுக்கும் பேருந்து சேவையைப்போலவே சீரான போக்குவரத்து வசதிகள் கிடைக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.