இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்தவர் கூறியது என்ன?
BBC Tamil September 15, 2025 02:48 AM
Getty Images இன்றைய போட்டியை புறக்கணிக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் குரல்கள் எழுந்து வருகின்றன.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் எப்போதுமே மிகவும் எதிர்பார்ப்புக்குரிய சிறப்பான ஒன்றாகவே இருந்துள்ளன . ஆனால் கடந்த மே மாதம் பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் உச்சம் தொட்டது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாட இருக்கின்றன. காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் உடனான போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தப் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

எனினும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அனுராக் தாக்கூர் பிசிசிஐ-யின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சர்வதேச தொடரில் அவசியம் கருதி பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடுவது முக்கியமாகிறது என்று அவர் தெரிவித்தார்.

கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள்

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடக் கூடாது என்று வலியுறுத்தி ஆம் ஆத்மி டெல்லியில் போராட்டம் நடத்தியது. அக்கட்சியின் டெல்லி மாநில தலைவர் இன்ஸ்டாகிராமில் இது தொடர்பாக காணொளி ஒன்றைப் பகிர்ந்து, "நமது சகோதரிகளின் குங்குமத்தை அழிக்க நினைத்தவர்களுடன் கிரிக்கெட் போட்டி விளையாட வேண்டிய அவசியம் என்ன?. நாங்கள் இதனை வன்மையாக எதிர்க்கிோம், புறக்கணிக்கிறோம்." எனப் பதிவிட்டுள்ளார்.

சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே நேரடியாக மத்திய அரசை விமர்சித்துப் பேசியுள்ளார்.

"3-4 மாதங்களுக்கு முன்பு நமது குடிமக்கள் பஹல்காமில் கொல்லப்பட்டனர், நமது சகோதரிகளின் குங்குமம் அழிக்கப்பட்டது, தற்போது வரை அது மறக்கப்படவில்லை" என்றார் உத்தவ் தாக்கரே.

பிரதமர் மோதியின் முந்தைய கருத்தை மேற்கோள் காட்டிப் பேசிய உத்தவ் தாக்கரே, "ரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது என மோதி தெரிவித்திருந்தார். ரத்தத்தையும் தண்ணீரையும் ஒன்றாகப் பார்க்க முடியாது என்றால் கிரிக்கெட்டும் ரத்தமும் மட்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? எப்படி கிரிக்கெட்டையும் போரையும் ஒரே நேரத்தில் நடத்த முடியும்?" எனக் கூறியிருந்தார்.

அரசாங்கம் தனது நடவடிக்கைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு தேசப்பற்றை வெறும் வணிகமாக மாற்றிவிட்டது எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

Getty Images பாஜக எம்பியும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான அனுராக் தாக்கூர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி நேரடியாக குடிமக்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அவர் தனது காணொளி செய்தியில், "பிசிசிஐ-யும் இந்திய அரசாங்கமும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்யவில்லையென்றால் நாம் இந்தப் போட்டியைக் காணாமல் புறக்கணிக்கும் நேரம் வந்துவிட்டது. கிரிக்கெட் வேண்டாம் எனக்கூறி உயிர்நீத்தவர்களின் குடும்பங்களுடன் நில்லுங்கள்." எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்க் கார்கேவும் தனது பதிவில், "பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் இழந்த உயிர்களின் மதிப்பு இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியிலிருந்து கிடைக்கும் விளம்பர வருவாயைவிட குறைவாகப் போய்விட்டதா? இது விளையாட்டு அல்ல, நமது தியாகிகளின் ரத்தத்திற்கு மேலாக லாபத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவமானகரமான உதாரணம் ஆகும்." என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பிசிசிஐ முடிவை ஆதரிக்கும் அனுராக் தாக்கூர் Getty Images

பாஜக எம்பியும் பிசிசிஐ முன்னாள் தலைவருமான அனுராக் தாக்கூர் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நடத்தும் முடிவை ஆதரித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பன்னாட்டு தொடர்கள் ஏசிசி அல்லது ஐசிசியால் ஒருங்கிணைக்கப்படுகின்றன, எந்த நாட்டிற்கும் அதில் கலந்து கொள்வது தேவையும் கட்டாயமும் ஆகிறது. நாம் கலந்து கொள்ளவில்லையென்றால், தொடரிலிருந்து வெளியேறிவிடுவோம். இதனால் மற்ற அணிகளுக்குப் புள்ளிகள் கிடைக்கும்" எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தானுடன் இந்தியா இருதரப்பு கிரிக்கெட் விளையாடுவதில்லை என்று குறிப்பிட்ட அனுராக் தாக்கூர், "இந்தியா மீதான தீவிரவாத தாக்குதல்களை பாகிஸ்தான் நிறுத்துகின்ற வரை அவர்களுடன் இருதரப்பு கிரிக்கெட் விளையாடப் போவதில்லை எனப் பல வருடங்களாக நாம் முடிவெடுத்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண் கூறியது என்ன?

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட சுபம் திவிவேதியின் மனைவி ஐஷ்னியா திவிவேதி ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசுகையில், "தாக்குதலுக்குப் பிறகு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால் பாகிஸ்தான் உடனான போட்டி தவறான செய்தியை சொல்கிறது" எனத் தெரிவித்தார்.

"இது மிகப்பெரிய தவறு, நமது நாட்டைச் சேர்ந்த மக்களே இதனைச் செய்கின்றனர். பிசிசிஐ இந்த உணர்வுகளைப் பற்றி கவலைப்படவில்லை" என்றார் ஐஷ்னியா.

பாகிஸ்தானுடன் விளையாடுவதால் நாம் அவர்களை வலுப்படுத்துகிறோம் எனத் தெரிவிக்கும் அவர், "இந்த போட்டியின் மூலம் பெறப்படும் எந்த வருவாயையும் பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கே செலவிடும். பாகிஸ்தான் தீவிரவாதத்தின் குடில் என நமக்குத் தெரிகிற போது நான் ஏன் அவர்களுக்கு வருவாய் கொடுக்க வேண்டும்?" என்றார்.

இதுகுறித்து எந்த இந்திய விளையாட்டு வீரரும் வெளிப்படையாக பேச முன்வராதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய ஐஷ்னியா, "இந்தியா-பாகிஸ்தான் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று எந்த கிரிக்கெட் வீரரும் கூறுவதில்லை. தற்போதைய வீரர்கள் ஏன் இதுபற்றி பேசுவதில்லை? பிசிசிஐ உங்களை துப்பாக்கி முனையில் வைத்துள்ளதா? நீங்கள் உங்கள் நாட்டுக்காக நிலைப்பாடு எடுக்க வேண்டும், ஆனால் நீங்கள் எடுப்பதில்லை" எனத் தெரிவித்தார்.

BBC டிக்கெட் விற்பனை சரிந்துள்ளதா?

இந்தியா-பாகிஸ்தான் மோதும் குழுவில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒமனும் உள்ளது. இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றால் மீண்டும் செப்டம்பர் 21-ஆம் தேதி விளையாடுவார்கள்.

இன்றைய போட்டிக்கு முன்பு டிக்கெட் விற்பனை தொடர்பாக பல்வேறு தகவல்கள் முன்வைக்கப்படுகின்றன.

டிக்கெட் முன்பதிவு இணையதளங்களை பிபிசி உருது சோதித்தபோது வெள்ளிக்கிழமை மதியம் வரை டிக்கெட் இருந்தது. ஆகஸ்ட் 29-ஆம் தேதியே டிக்கெட் முன்பதிவு தொடங்கியிருந்தது. துபையில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தன.

பிபிசி உருதுவிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத அமீரக கிரிக்கெட் வாரிய அதிகாரிகள், "டிக்கெட் விற்பனை குறைவு என்கிற எண்ணம் தவறு. போட்டிக்கு முன்பாக அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிடும்" எனத் தெரிவித்திருந்தனர்.

Getty Images ஆசியக் கோப்பை அணிகள்

மறுபுறம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம் எனக் கூறும் பார்வையாளர்கள், வழக்கமாக இந்தியா-பாகிஸ்தான் போட்டியைக் காண அதிகமானவர்கள் வருவார்கள். ஆனால் இந்த முறை பாகிஸ்தானுடனான போட்டிக்கு எதிரான புறக்கணிப்பு பிரசாரம் இந்த பார்வையாளர்களையும் பாதித்துள்ளது எனத் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தான் ரசிகர்களுக்கான விசாக்கள் தொடர்பான சந்தேகங்களும் டிக்கெட் விற்பனையைக் குறைத்துள்ளன. "முதல் முறையாக ஒரு இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கும் முன்பிருக்கும் ஒரு பாரம்பரிய உற்சாகம் இம்முறை இல்லை" என்கிறார் முன்னாள் பாகிஸ்தான் அணியின் கேட்பனான ரஷித் லத்தீஃப்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினோ, தொடரில் கடுமையான போட்டி இல்லாததுடன் இதனை தொடர்புபடுத்துகிறார். இந்திய அணி மற்ற அணிகளைவிட வலுவாக உள்ளது எனக் கூறும் அஷ்வின், "இந்தியா தனது ஏ அணியை அனுப்பினாலும், அந்த அணி மற்ற அணிகளுடன் போட்டியிட முடியும்" எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.