விஜய்யின் அரசியல் பிரவேசம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது, ஆனால் அது திமுக கூட்டணியை பாதிக்காது என மதிமுக பொதுச்செயலாளர் திருச்சியில் வைகோ கூறியுள்ளார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “நாளை திருச்சியில் மதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு நடைபெறுகிறது. மதிமுக மாநாடு வரலாறு மீண்டும் திரும்புகிறது என கூறும் வகையில் புத்தெழுச்சியுடன் நடைபெற உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும். திமுக அரிதி பெரும்பான்மை பெறும். மாநாட்டிற்கு பின் மதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறும். திரையுலகில் ஜோலிக்கும் முன்னணி நட்சத்திரமான விஜய்க்கு மிகப் பெரும்பான்மையான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் விஜையை காண மிகுந்த ஆர்வத்தோடு வருவதும் அதே போல கலையுலக கவர்ச்சியை விஜயை காண துடிப்பதையும் திருச்சியில் காண முடிந்தது. ஆனால் தேர்தல் களத்தில் விஜய் கூறுவது போன்ற நிலை அமையாது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். அதை தடுக்கும் சக்தியை விஜயால் ஏற்படுத்த முடியாது. விஜய்யின் அரசியல் பிரவேசம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த தாக்கம் திமுக கூட்டணியை பாதிக்காது. அது எந்த விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தேர்தல் முடிவுகளை பொறுத்து தான் கூற முடியும். திமுக கூட்டணியில் அணு அளவு கூட எந்த அசைவும் ஏற்படாது.சிறு நெருடல் கூட திமுக கூட்டணியில் ஏற்படாது.
அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை மட்டுமல்ல அறிவிக்கப்படாத வாக்குறுதிகளையும் முதல்வர் நிறைவேற்றி வருவதோடு வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்துள்ளார். தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும், தமிழகத்தின் வாழ்வாதாரத்தை காக்கவும் ஒரு நாள் கூட ஓய்வெடுக்காமல் முதல்வர் உழைத்து பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார். உலக இசை மேதைகளுக்கு செய்யப்படாத மரியாதையை இசைஞானி இளையராஜாவிற்கு முதல்வர் செய்துள்ளார். தமிழனுக்கு மிகப்பெரிய மரியாதை செய்துள்ளார். தமிழுக்கு, தமிழ்நாட்டுக்கு, தமிழ் கலைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஆனால் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் இருந்து வருகிறார்கள். கீழடி ஆய்வை மத்திய அரசு ஏற்க மறுக்கிறார்கள். உலகின் பழமையான நாகரிகம் தமிழர் நாகரிகம் தான், திராவிட நாகரிகம் தான் என்பதை ஆய்வாளர்கள் நிரூபித்து வருகிறார்கள். மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. அதிமுகவை விமர்சனம் செய்ய விஜய்க்கு மனது இல்லை. அவர் என்ன அரசியல் நிலைப்பாடு வைத்துள்ளார் என்பதை நான் கூற முடியாது” என்றார்.