சென்னை ராயப்பேட்டை பகுதியில் நாய்க்கடிக்கு உள்ளாகி ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது நஸ்ரீன் என்ற நபர் கடந்த ஜூலை மாதம் லெசன் சாலையில் உள்ள மீரா சாஹித் மார்க்கெட் பகுதியில் ஆட்டோவில் ஏறியபோது, தெருநாய் ஒன்று அவரது முழங்காலின் பின்பகுதியில் கடித்தது. உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், பின்னர் வீடு திரும்பியிருந்தார்.
ஆனால், கடந்த 12ஆம் தேதி முகமதுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் மீண்டும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு ஆரம்ப சிகிச்சை பெற்ற பிறகு மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், முகமது ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினர். இதனால் அவர் தனி அறையில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முகமது உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் ராயப்பேட்டையில் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெருநாய் கடி அதிகரித்து வரும் நிலையில், மக்கள் ஆரோக்கியம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.