மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது – நிர்மலா சீதாராமன் சொல்கிறார்!
Seithipunal Tamil September 15, 2025 03:48 PM

ஜி.எஸ்.டி. விகிதங்களில் மாற்றம் செய்து, மக்கள் மீதான வரிச்சுமை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

2017-ம் ஆண்டு அமலுக்கு வந்த ஜி.எஸ்.டி.யில் முன்பு 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 அடுக்குகள் இருந்தன. தற்போது அதை 2 அடுக்குகளாக (5% மற்றும் 18%) குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

சிகரெட், புகையிலை, பான் மசாலா, சொகுசு கார்கள், குளிர்பானங்கள் போன்ற பாவப்பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கு தனியாக 40% சிறப்பு வரி விதிக்கப்படுகிறது.

இந்த மாற்றத்தால் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை குறைந்து, மக்களின் வாழ்க்கைச் செலவு சுமாரான அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த சீர்திருத்தம் வரும் 22-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன் கூறியதாவது:“முன்பு 12% மற்றும் 18% வரிக்குட்பட்ட பல பொருட்களின் விகிதம் 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. சில பொருட்களுக்கு முற்றிலும் வரி நீக்கப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தம் 140 கோடி மக்களுக்கும் நன்மை தரும். தீபாவளி, நவராத்திரி, துர்காபூஜை போன்ற பண்டிகைகளை முன்னிட்டு மக்கள் அதிகம் வாங்கும் காலத்தை மனதில் கொண்டு இதை முன்கூட்டியே அமல்படுத்துகிறோம். இது ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி என்று அவர் கூறியுள்ளார் .”

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.