Ilayaraja SPB: இளையராஜாவின் இசையில் பல நூறு இனிமையான பாடல்களை பாடியவர் எஸ்பி பாலசுப்பிரமணியம். இளையராஜாவும் எஸ்.பி.பி- யும் ஒன்றாகவே சினிமாவில் வளர்ந்தவர்கள்
. இருவரும் ‘வாடா போடா’ நண்பர்கள். எப்படிப்பட்ட பாடலாக இருந்தாலும், அது எவ்வளவு கஷ்டமானதாக இருந்தாலும் பாலு பாடி விடுவான் என்கிற நம்பிக்கை இளையராஜாவுக்கு இருந்தது. இளையராஜாவின் நம்பிக்கையை ஒரு நாளும் பாலு பொய்யாக்கியது கிடையாது.
எஸ்பிபியின் இசைக் குழுவில் ஆர்மோனியம் வாசிப்பராக கூட இளையராஜா வேலை செய்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. ரஜினி, கமல், மோகன், விஜயகாந்த், பிரபு, ராமராஜன் போன்ற பல நடிகர்களுக்கு இளையராஜா இசையமைத்த பல இனிமையான பாடல்களை எஸ்பிபி பாடியிருக்கிறார். இளையராஜாவின் கற்பனைக்கு குரல் கொடுத்தவர் எஸ்.பி.பி.
அந்தப் பாடல்களைத்தான் இப்போதும் 70,80 கிட்ஸ்கள் கார் பயணங்களில் கேட்டு ரசித்து வருகிறார்கள். அந்த அளவுக்கு இளையராஜா எஸ்.பி.பி கூட்டணி மறக்க முடியாத நினைவில் நிற்கும் பல இனிமையான பாடல்களை கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில்தான் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பாக எடுக்கப்பட்ட பாராட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி ‘சில வருடங்களுக்கு முன்பு எனது பாடலை யாரும் பாடக்கூடாது என இளையராஜா காப்பி ரைட்ஸை கையில் எடுத்த போது இசைக் கச்சேரிகளில் பாடிக் கொண்டிருந்த பாலுவுக்கும் அது சொல்லப்பட்டது. அப்போது ‘அவன் என்னை புரிந்துகொள்வான். என் பாடல்களை பாட மாட்டான்’ என ராஜா சொன்னார். அவர் சொன்னது போலவே இளையராஜா அப்படி அறிவித்த பின் பாலு அவரின் பாடலை எங்கும் பாடவில்லை.
இளையராஜாவின் அண்ணன் பாஸ்கரன் இறந்து போனார். ராஜாவின் ஆருயிர் மனைவி ஜீவா அவரை விட்டுப் போனார். அவர் ஆசையாய் வளர்த்த மகள் பவதாரணி.. அவரைப் பார்த்தாலே உடம்பில் மின்சாரம் வந்தது போல் மாறிவிடுவார் இளையராஜா. பவதாரிணியும் அவரை விட்டுப் போனார். ஆனால் ராஜா எதற்கும் கலங்கியதில்லை. அதேநேரம் அவர்கள் யாருக்கும் அழாத இளையராஜா பாலுவுக்காக கண்ணீர் சிந்தினார். அப்படிப்பட்ட நட்பு அவர்களுடையது’ என பேசினார் ரஜினி.