முகூர்த்த தினம்..திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்!
Seithipunal Tamil September 15, 2025 02:48 PM

முகூர்த்த தினம் என்பதால் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சண்முக விலாச மண்டபம் மற்றும் கோவில் முன் பகுதியில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லாமல் மாவட்டங்கள் தோறும் ஏரளமான பக்தர்கள்  தரிசனம் செய்து விட்டு செல்வர்,திருவிழா மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் விடுமுறை தினத்தை முன்னிட்டு இன்று திரளான பக்தர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி  4 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம், பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை என அனைத்து பகுதிகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும், சுப முகூர்த்ததினம் என்பதால் இன்று கோவில் சண்முக விலாச மண்டபம் மற்றும் கோவில் முன் பகுதியில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. கோவில் வளாகத்தில் மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கூட்டம் அதிக அளவு இருந்தது. 

திருச்செந்தூர் கோவில் வளாகம் மட்டுமின்றி திருச்செந்தூர் சன்னதி தெரு, ரத வீதிகள் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களிலும் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.