பழைய, புதிய எதிர்கட்சிகளே.. 2026ல் பார்க்கலாம்! - விஜய்யை சீண்டிய ரஜினி?
Webdunia Tamil September 15, 2025 02:48 PM

நேற்று நடந்த இளையராஜாவுக்கான பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியது வைரலாகியுள்ளது.

நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களுக்கு பிரச்சாரத்திற்கு சென்ற நிலையில், அதேசமயம் சென்னையில் இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா தமிழக அரசால் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருடன் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் கலந்துக் கொண்டனர்.

அதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து பேசியபோது “தமிழ்நாட்டு அரசியலில் பழைய, புதிய எதிர்க் கட்சியினருக்கு ஒரு சவாலாக இருந்துக் கொண்டு, வாங்க 2026ல் பார்க்கலாம் என தனக்கே உரித்தான புன்னகையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்” என பேசியுள்ளார்.

நேற்று விஜய்யின் வருகையால் திருச்சியே ஸ்தம்பித்த நிலையில் புதிய எதிர்க் கட்சி என தவெகவைதான் ரஜினிகாந்த் மறைமுகமாக விமர்சித்திருக்கிறாரா என தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என இழுத்தடித்து பின் அறிவித்ததை, மதுரை மாநாட்டில் விஜய் மறைமுகமாக விமர்சித்ததாக கூறப்பட்ட நிலையில், ரஜினியின் இந்த கருத்து அதற்கு பதிலடியா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.