வக்ஃப் சட்டத்தில் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த பிரிவுகள் என்ன?
BBC Tamil September 16, 2025 07:48 AM
AFP via Getty Images வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக பலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவில், முழு வக்ஃப் திருத்தச் சட்டம், 2025-க்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இருப்பினும், இந்தச் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்தத் திருத்தத்திற்கு எதிராக 100-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்து, இந்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், முஸ்லிம்களின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கம் கொண்டது என்றும் கூறினர்.

புதிய சட்டம், வக்ஃப் வாரியங்களில் சீர்திருத்தத்தையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்யும் என்றும், பொது மற்றும் தனியார் சொத்துக்களின் மீதான பெரிய அளவிலான "ஆக்கிரமிப்புகளை" தடுக்கும் என்றும் அரசு கூறியுள்ளது.

தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, மே மாதம் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இந்த வழக்கை விசாரித்து, மே 22-ஆம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.

உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

முழு சட்டத்திற்கும் தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், சில பிரிவுகளுக்குப் பாதுகாப்பு தேவை என்று கூறியுள்ளது.

  • மாநில வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்றையும், மத்திய வக்ஃப் கவுன்சிலில் இந்த எண்ணிக்கை நான்கையும் தாண்டக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • மேலும், வக்ஃப் சொத்து என அறிவிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட சொத்து அரசிற்கு சொந்தமானதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கும் பிரிவிற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
  • தனிநபர்களின் உரிமைகள் குறித்து முடிவெடுக்க மாவட்ட ஆட்சியரை அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது. இது அதிகாரங்களைப் பிரிப்பது (separation of powers) என்ற கொள்கையை மீறுவதாகும் என்றும் அது கூறியுள்ளது.
  • விதிகள் உருவாக்கப்படும் வரை, ஒரு சொத்தை வக்ஃப் சொத்து என்று அறிவிப்பதற்கு முன்பு ஐந்து ஆண்டுகள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றியவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இருப்பினும், சொத்து பதிவு தொடர்பான விவகாரத்திற்கு உச்ச நீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்கவில்லை.

தலைமை நீதிபதி கவாய், "1995 முதல் 2013 வரை பதிவுகள் தொடர்ந்து நடந்து வந்திருப்பதைக் கண்டோம். எனவே, இதில் புதிதாக எதுவும் இல்லை" என்று கூறினார்.

சர்ச்சைக்குரிய பிரிவுகள் Getty Images

வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025-இல், மிகப்பெரிய ஆட்சேபனை மாவட்ட ஆட்சியரின் அதிகாரம் குறித்துதான்.

ஒரு சொத்து அல்லது நிலம் ஏற்கனவே அரசின் வசம் இருந்து, வக்ஃப் வாரியமும் அதை வக்ஃப் சொத்து என்று உரிமை கோரினால், அந்த முடிவு மாவட்ட ஆட்சியரின் விருப்பத்தைப் பொறுத்தது என்று திருத்தப்பட்ட மசோதாவில் ஒரு விதி உள்ளது.

இதன்படி, ஆட்சியர் அரசின் வசம் உள்ள வக்ஃப் என்று உரிமை கோரப்பட்ட நிலம் குறித்த தனது அறிக்கையை அரசிற்கு அனுப்பலாம்.

ஆட்சியரின் அறிக்கைக்குப் பிறகு, அந்தச் சொத்து அரசின் சொத்து என்று கருதப்பட்டால், வருவாய்த் துறை பதிவேடுகளில் அது நிரந்தரமாக அரசு சொத்தாகப் பதிவு செய்யப்படும்.

இந்தச் சட்டத்தில், வக்ஃப் வாரியத்தின் ஆய்வு செய்யும் அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது. இனி, எந்தவொரு சொத்தும் வக்ஃப்க்குச் சொந்தமானதா இல்லையா என்பதை ஆய்வு செய்து சொல்ல வக்ஃப் வாரியத்தால் முடியாது.

இந்த சட்டத்தின்படி, வக்ஃப் என்று உரிமை கோரப்பட்ட சொத்துக்களின் அதிகாரம் இப்போது மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வக்ஃப் கவுன்சிலின் அமைப்பு குறித்தும் சர்ச்சை உள்ளது. மத்திய வக்ஃப் கவுன்சிலின் அனைத்து உறுப்பினர்களும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், இப்போது இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை அனுமதிக்க ஒரு பிரிவு உள்ளது.

இத்துடன், மத்திய வக்ஃப் கவுன்சிலின் முஸ்லிம் உறுப்பினர்களில், இரண்டு பெண் உறுப்பினர்கள் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், ஷியா மற்றும் சுன்னி தவிர, போஹ்ரா மற்றும் ஆகாகானிக்களுக்குத் தனி வாரியங்கள் அமைப்பது பற்றியும் இதில் கூறப்பட்டுள்ளது. தற்போது உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் மட்டுமே ஷியா வக்ஃப் வாரியங்கள் உள்ளன.

நாடாளுமன்றத்திலிருந்து நீதிமன்றம் வரை நடந்தது என்ன?

ஏப்ரல் 2: வக்ஃப் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவிற்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. மறுநாள், ஏப்ரல் 3 அன்று, மாநிலங்களவையிலும் இந்த மசோதா இரவில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் மசோதாவிற்கு ஆதரவாக 128 வாக்குகளும், எதிராக 95 வாக்குகளும் பதிவாகின.

ஏப்ரல் 5: இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார், அதன் பிறகு இது சட்டமாக மாறியது.

ஏப்ரல் 16: வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு, இந்த வழக்கில் பல கருத்துக்களைத் தெரிவித்தது. ஒரு இந்து மத அறக்கட்டளையில் முஸ்லிம் அல்லது இந்து அல்லாதவர்களுக்கு இடம் அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்குமா என்று உச்ச நீதிமன்றம் கேட்டது.

ஏப்ரல் 17: வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்தபோது, மத்திய அரசு சில உறுதிமொழிகளை வழங்கியது. நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இதற்கு விரிவான விசாரணை தேவை என்று கூறினார். அதே நேரத்தில், அரசு இரண்டு விதிகளையும் அமல்படுத்தாது என்று துஷார் மேத்தா உறுதியளித்தார். முதலாவதாக, வக்ஃப் கவுன்சில் மற்றும் வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். இரண்டாவதாக, தற்போது பதிவு செய்யப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட வக்ஃப் சொத்துக்களில் எந்தத் தலையீடும் இருக்காது. உச்ச நீதிமன்றம் இந்த உறுதிமொழிகளைப் "பதிவு" செய்துகொண்டது.

மே 5: தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2024-ஐ எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்து விரிவான விசாரணை தேவை என்றும், அவரது ஓய்வைக் கருதி, அது நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்படும் என்றும் கூறினார்.

மே 15: உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை மே 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மே 20: தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் தலைமையிலான அமர்வு விசாரணையைத் தொடங்கியது. வக்ஃப் திருத்தத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கத் தேவையா இல்லையா என்பது குறித்து விசாரணை நடந்தது. விசாரணையின்போது, மனுதாரர்கள் இரண்டு பிரிவுகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தினர். முதலாவதாக, வக்ஃப் கவுன்சில் மற்றும் வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்களை நியமிக்கும் பிரிவுக்கு தடை விதிக்க வேண்டும். இரண்டாவதாக, 'வக்ஃப் பை யூசர்' என்ற பிரிவை ரத்து செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும். 'வக்ஃப் பை யூசர்' என்பது நீண்ட காலமாக வக்ஃப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு, அதன் காரணமாக வக்ஃப் நிலையை அடைந்த சொத்துக்களைக் குறிக்கிறது. மத்திய அரசு எந்த இடைக்கால தடை விதிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தது.

மே 22: வக்ஃப் திருத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்தது.

வக்ஃப் வாரியத்தின் சொத்து எவ்வளவு? Getty Images புதிய சட்டத்தில் ஆய்வு செய்யும் அதிகாரம் வக்ஃப் ஆணையருக்குப் பதிலாக ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வக்ஃப் என்பது இஸ்லாத்தைத் பின்பற்றும் நபர், அல்லாஹ் பெயரில் அல்லது மத அல்லது தொண்டு நோக்கத்திற்காக நன்கொடையாக அளிக்கும் அசையும் அல்லது அசையா சொத்து ஆகும்.

"வக்ஃப் என்பது ஒரு அரபு வார்த்தை. அதன் பொருள் 'நிறுத்தம்'. ஒரு சொத்து அல்லாஹ் பெயரில் வக்ஃப் செய்யப்பட்டால், அது நிரந்தரமாக அல்லாஹ்வின் பெயரில் மாறிவிடுகிறது. அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது" என்று வக்ஃப் நல மன்றத் தலைவர் ஜாவேத் அகமது கூறுகிறார்.

உச்ச நீதிமன்றமும் ஜனவரி 1998-ல் அளித்த ஒரு தீர்ப்பில், 'ஒரு சொத்து வக்ஃப் ஆன பிறகு, அது எப்போதும் வக்ஃபாகவே இருக்கும்' என்று கூறியது.

BBC பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வக்ஃப் சொத்துக்களை வாங்கவோ விற்கவோ முடியாது, அவற்றைப் பிறருக்கு மாற்றவும் முடியாது.

சிறுபான்மை விவகாரங்கள்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, தற்போது இந்தியா முழுவதும் வக்ஃப் வாரியத்திடம் சுமார் 8.7 லட்சம் சொத்துக்கள் உள்ளன. அவை சுமார் 9.4 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 1.2 லட்சம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக வக்ஃப் சொத்துக்கள் இந்தியாவில் உள்ளன. இந்தியாவில், ராணுவம் மற்றும் ரயில்வேக்கு அடுத்தபடியாக அதிக நிலம் வக்ஃப் வாரியத்திடம் தான் உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.