கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய ராமதாஸ், “எவ்வளவோ செய்திகள் தற்போது இருந்தாலும் முதலாவதாக ஒசூர், வேப்பனஹள்ளி மற்றும் தளி உள்ளிட்ட மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தனி மாவட்டம் அறிவிக்கப்பட வேண்டும். ஒசூர் மாநகராட்சியாக வளர்ந்து உள்ள நிலையில் இதற்காக தொடர்ந்து பாமகவின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி சட்டமன்றத்தில் பலமுறை வலியுறுத்தி பேசியுள்ளார். ஆகவே இந்த மூன்று சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஒசூர் மாவட்டம் தனியாக அறிவிக்கப்பட வேண்டும். தற்பொழுது நிலவும் தந்தை, மகன் இடையே ஆன பிரச்சனைக்கு கடந்த 11ம் தேதி அதாவது இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே தீர்வு ஏற்பட்டுவிட்டது. நல்லவைகள் மேலோங்கும் தீயவைகள் கீழே இறங்கும். கட்சி இதுபோன்று பிளவு பட்டு உள்ள நிலையில் சட்டமன்றத் தேர்தலும் நெருங்கி வரும் சூழலில் இருவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என தொண்டர்கள் நினைக்கின்றனர். கூட்டணி குறித்த் விரைவில் அறிவிக்கப்படும்.
உலக அளவில், இந்திய அளவில், தமிழக அளவில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இவைகளை யாராலும் தடுக்க முடியாது. ஆகவே நல்லது நடந்து கொண்டே இருக்கும். தீயவை எல்லாம் அகன்று போகும் நல்லவை எல்லாம் மேலோங்கும். நல்லவை மேலே போகும் தீயவை கீழே போகும்” என்றார்.