சென்னை: ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் தொடர்பான கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.
2017-ஆம் ஆண்டு அமலுக்கு வந்த ஜிஎஸ்டி, நாட்டில் பல்வேறு மறைமுக வரிகளை நீக்கி ஒரே வரி முறையாக மாற்றியது. ஆரம்பத்தில் 4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி, தற்போது 2 அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பயன்படுத்தும் பல பொருட்களில் வரி குறைந்துள்ளதாக மத்திய அரசு வலியுறுத்துகிறது.
கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன் கூறியதாவது:"ஜிஎஸ்டியில் ஏதாவது குறை இருந்தால், 'மோடி ஏன் இப்படி செய்கிறார்? நிர்மலா சீதாராமன் என்ன செய்கிறார்? அவருக்கு ஊறுகாய்தான் போட தெரியும், ஜிஎஸ்டி நடத்த தெரியாது' என்று விமர்சித்தார்கள். ஆனால், ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் மாநிலங்களுக்கு எவ்வளவு வருமானம் அதிகரித்துள்ளது என்பதை யாரும் கூறவில்லை. அதற்கு 'ஊறுகாய் போடும் நிர்மலாதான் காரணம்' என்று யாரும் சொல்லவில்லை. சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. நாட்டு நலனுக்காகவே நாங்கள் செய்கிறோம்."
மேலும் அவர் கூறியதாவது:"ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநில நிதி அமைச்சர்களும் உடன் இருக்கிறார்கள். முடிவுகள் அனைவரின் பங்கேற்புடனேயே எடுக்கப்படுகின்றன. பாப்கார்ன் வரி குறித்தும் கிண்டல் செய்தனர். இன்று பல உணவுப் பொருட்கள் 5% அல்லது சீரோ சதவீத வரியில் உள்ளன. வகைப்பாடு பிரச்சனை நீங்கியுள்ளது."
ஜிஎஸ்டி சீர்திருத்தம் தீபாவளிக்கு முன்னதாக அமல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நவராத்திரிக்கு முன்னதாகவே அமலுக்கு வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் நுகர்வோருக்கு உடனடி நன்மை கிடைக்கப்போகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
"இது ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்திருக்கும் வெற்றியாகும்" என நிதி அமைச்சர் வலியுறுத்தினார். மொத்தத்தில், நவராத்திரிக்கு முன்பே அமலுக்கு வரும் ஜிஎஸ்டி சீர்திருத்தம், நுகர்வோருக்கு விலை குறைவாக பல பொருட்கள் கிடைக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.