கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவையைச் சேர்ந்த மகேஸ்வரி (வயது 50), தமிழக அரசின் மகளிர் உரிமைத் திட்டத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், அதன் பின்னர் எந்தவிதமான குறுஞ்செய்தி அல்லது தகவலும் பெறாததால், தன்னுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என எண்ணியிருந்தார். இதையடுத்து, கடந்த ஜூலை 25ஆம் தேதி கிணத்துக்கடவு ஒன்றியத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில், மீண்டும் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் அளித்தார்.
அந்த முகாமில் அவரிடம் பேசிய அதிகாரிகள், “மகளிர் உரிமைத் தொகை கடந்த 2 ஆண்டுகளாக உங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. உங்கள் வங்கிக் கணக்கைச் சரிபார்க்கவும்” என கூறினர். அதன்பேரில் மகேஸ்வரி, பரோடா வங்கியில் விசாரணை மேற்கொண்டபோது, அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, அவரது ஆதார் எண்ணுடன் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாந்திதேவி என்ற நபரின் வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய கணக்கிற்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை செலுத்தப்பட்டு வருவதாகவும் வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி, உடனடியாக பொள்ளாச்சி துணை ஆட்சியர் அலுவலகத்தில் முறையீடு செய்தார். இதுகுறித்து விளக்கமளித்த கிணத்துக்கடவு தாலுகா சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் பானுமதி, “மகளிர் உரிமைத் தொகை சென்னை மையத்திலிருந்து பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பப்படுகிறது.
தற்போது நிகழ்ந்த தவறை திருத்தி, மகேஸ்வரியின் சரியான வங்கி கணக்கிற்கு தொகையை வரவு வைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என உறுதியளித்தார்.