ஒரே போடு! தியாகத்துக்கும், பணத்துக்கும் வித்தியாசம் தெரியுமா...?முதலில் எங்கள் வரலாறு தெரியுமா மிஸ்டர் விஜய்?- பெ. சண்முகம்
Seithipunal Tamil September 16, 2025 09:48 AM

அரசியலுக்கு வந்து பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை” என்ற த.வெ.க. தலைவர் விஜயின் கூற்றை ஊடகங்கள் ஒரு பெரும் தியாகச் சின்னமாக காட்டுகின்றன. ஆனால், உண்மையில் அரசியலின் அர்த்தமும், தியாகத்தின் உயரமும் கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாறே எடுத்துக்காட்டாக நிற்கிறது.

பல தசாப்தங்களாக மக்களுக்கு ஆட்சியளித்த தோழர் வி.எஸ். அச்சுதானந்தன்,இ.எம்.எஸ்.,மாணிக் சர்க்கார், புத்ததேவ் பட்டாச்சாரியா, ஜோதி பாசு, நிரூபன் சக்கரவர்த்தி, தசரத் தேவ், இ.கே. நாயனார் போன்ற மகத்தான தலைவர்களை எதிரிகளால்கூட பண விரும்பிகள் என்று ஒருபோதும் குற்றம் சாட்ட முடியவில்லை.அவர்களின் ஆட்சியில் மக்கள் சேவை மட்டுமே மையமாக இருந்தது. அதோடு, தோழர் இ.எம்.எஸ்., பி.சுந்தரைய்யா, ஹர்கிசன் சிங் சுர்ஜித் போன்றவர்கள் அகில இந்திய பொதுச் செயலாளராக பணியாற்றியபோது, தங்கள் சொந்த குடும்ப சொத்துக்களையே கட்சிக்காக தாராளமாக வழங்கியவர்கள்.

இதுவே அல்லாமல், அடிப்படைக் கட்சி உறுப்பினர்கள்கூட தங்கள் சொத்துக்களை மக்களின் பயன்பாட்டிற்காக ஒப்படைத்துள்ளனர். உடல், மனம், பொருள், உயிர்—எல்லாவற்றையும் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்பதே கம்யூனிஸ்டுகளின் அரசியல்.

பணம் சம்பாதிக்காமல் இருப்பதே அரசியலின் தூய்மை அல்ல; மக்களுக்காக தியாகம் செய்வதே உண்மையான அரசியல்!

எனவே, “வரலாற்றை படியுங்கள் மிஸ்டர் விஜய். தியாகம் என்றால் என்ன? மக்கள் நலனுக்காக வாழ்ந்து, சொத்தையே அர்ப்பணித்த கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கையைப் படியுங்கள்” என்று பெ. சண்முகம் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.