வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்திற்கு பகுதியளவில் தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
Seithipunal Tamil September 16, 2025 07:48 AM

வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக, அகில இந்திய மஜ்லிஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், இடதுசாரிகள், முஸ்லிம் அமைப்புகள், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் என மொத்தம் 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், முதலில் 5 மனுக்களை மட்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. மேலும், புதிய வக்பு சட்டத்தின் கீழ் எந்தவொரு நியமனங்களோ அல்லது நடவடிக்கைகளோ மேற்கொள்ளக்கூடாது என்று இடைக்காலத் தடையும் விதித்தது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் அனைத்து விதிகளையும் நிறுத்தும் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. அதேவேளையில், சில முக்கிய பிரிவுகளுக்கு இடைக்காலத் தடையை விதித்தது.

2025-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வக்பு திருத்தச் சட்டத்தில், ஒருவர் வக்பு வாரியத்தை அமைக்க, குறைந்தது 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றியிருக்க வேண்டும் என்ற விதியை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. “ஒருவர் இஸ்லாத்தைப் பின்பற்றுபவரா என்பதைத் தீர்மானிக்கும் நடைமுறை விதிகள் வரைவாகும் வரை இந்த பிரிவு அமலுக்கு வராது” என்றும் நீதிமன்றம் கூறியது.

அதேபோல், வக்பு என அறிவிக்கப்பட்ட சொத்து அரசாங்கச் சொத்தா என்பதைத் தீர்மானித்து உத்தரவிடும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கியிருந்த சட்டப் பிரிவையும் உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

மேலும், வக்பு வாரியத்தில் 3 முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும், வக்பு கவுன்சிலில் 4 முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

 மொத்தத்தில், வக்பு திருத்தச் சட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்படவில்லை என்றாலும், அதில் உள்ள சில சர்ச்சைக்குரிய பிரிவுகளின் அமல்படுத்தலை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.