சென்னை போயஸ் கார்டனில் அண்ணா உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் சசிகலா. பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்ணாவின் எண்ணங்களை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நிறைவேற்றினார்கள். அண்ணாவுக்கு சிலை வைத்தவர் எம்.ஜி.ஆர்., எம்.ஜி.ஆர். வழியில் இருந்து ஜெயலலிதா கொஞ்சம் கூட மாறவில்லை. எம்.ஜி.ஆர். 1980-ல் அண்ணா வீட்டை அரசுக்கு வழங்கினார். 1995-ம் ஆண்டு அண்ணாவின் புத்தகங்களை ஜெயலலிதா அரசுடமையாக்கினார். அண்ணா.. அண்ணா.. என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால், அவருக்காக எல்லாம் செய்தது அ.தி.மு.க.தான்.
இன்றைக்கு அரசாங்கம் இதைச் செய்கிறேன், அதைச் செய்கிறேன் என்று வாய் ஜாலத்தில் போகிறது.
முதல்-அமைச்சர் வெளிநாடு டூர் சென்றார். ரூ.15,516 கோடி முதலீடு, 17 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்கள். எனக்கு தெரிந்த வகையில், 89 சதவீதம் ஏற்கனவே இங்கே இருக்கும் தொழிற்சாலைகளின் விரிவாக்கம்தான். 11 சதவீதம்தான் புதியது. அமெரிக்காவின் வரி விதிப்பால் திருப்பூர், ஈரோடு ஜவுளி தொழில் முடங்கிப்போய் உள்ளது. 32 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதை முதலில் முதல்-அமைச்சர் சரிசெய்ய வேண்டும். அதற்கு இந்த அரசு என்ன செய்யப்போகிறது. ரூ.23 ஆயிரம் கோடி கடல் உணவு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு என்ன செய்யப்போகிறீர்கள்?. அரசு நிதி நெருங்கடியை சந்தித்துக் கொண்டிருக்கும்போது முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம் வீண் என்றுதான் நான் செல்வேன்.