2001 ஜூன் 1 அன்று, நேபாள மன்னரின் இல்லமான நாராயண்ஹிட்டி அரண்மனையின் திரிபுவன் சதனில் ஒரு விருந்து நடைபெறவிருந்தது. இதற்கு பட்டத்து இளவரசர் திபேந்திரா தலைமை தாங்கினார்.
ஒவ்வொரு நேபாள மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையும் நடைபெறும் இந்த விருந்து, 1972-ல் அரியணை ஏறிய பிறகு மன்னர் பிரேந்திராவால் தொடங்கப்பட்டது.
ஒரு மாதத்திற்கு முன்பு, மே மாதத்தில், இவ்வாறான விருந்து மகேந்திர மன்சிலில் நடைபெற்றது.
அங்கு மன்னர் பிரேந்திராவின் தாயார் ஓர்மன் மற்றும் முன்னாள் நேபாள மன்னர் மகேந்திராவின் இரண்டாவது மனைவி ரத்னா தேவி வசித்து வந்தனர்.
அன்று இரவு 7:45 மணிக்கு, பேன்ட் மற்றும் சட்டை அணிந்த இளவரசர் திபேந்திரா, தனது ஏடிசி மேஜர் கஜேந்திர போஹ்ராவுடன் பில்லியர்ட்ஸ் அறைக்கு வந்தார். அவர் மேஜர் போஹ்ராவுடன் பில்லியர்ட்ஸ் பயிற்சி செய்தார்.
அங்கு முதலில் வந்தவர், மன்னர் பிரேந்திராவின் மைத்துனரும், இந்தியாவைச் சேர்ந்த சுர்குஜாவின் இளவரசருமான மகேஷ்வர் குமார் சிங்.
பில்லியர்ட்ஸ் அறைக்குள் வந்தபோது, இளவரசர் திபேந்திரா அவரை வரவேற்றார். அவர் என்ன குடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது, மகேஷ்வர் சிங் " ஃபேமஸ் கிரௌஸ் (Famous Grouse ) " என்று கூறினார்.
சில நிமிடங்களில், மகாராணி ஐஸ்வர்யா மற்றும் மன்னர் பிரேந்திராவின் மூன்று சகோதரிகளான இளவரசி ஷோபா, சாந்தி, சாரதா ஆகியோரும் அங்கு வந்தனர்.
இரவு 7.40 மணியளவில், திபேந்திராவின் உறவினர் பராஸ், தனது தாய் இளவரசி கோமல், சகோதரி பிரேர்ணா மற்றும் மனைவி ஹிமானியுடன் அங்கு வந்தார்.
மன்னர் பிரேந்திரா ஒரு பத்திரிகையின் ஆசிரியரான மாதவ் ரிமலுக்கு நேர்காணல் கொடுத்துக் கொண்டிருந்ததால், அவர் வருவதற்கு சற்று தாமதமானது.
இதற்கிடையில், மன்னரின் தாயார் தனது மெர்சிடிஸ் காரில் அங்கு வந்தார். ஒரு கையில் பணப்பையும், இன்னொரு கையில் மின்விசிறியும் வைத்திருந்தார். பில்லியர்ட்ஸ் அறைக்கு அடுத்துள்ள அறைக்குள் சென்று சோபாவில் அமர்ந்தார்.
சில நிமிடங்களில், பில்லியர்ட்ஸ் அறையின் கதவு திறந்து, மன்னர் பிரேந்திரா உள்ளே நுழைந்தார். காரில் வருவதற்குப் பதிலாக, அவர் தனது அலுவலகத்திலிருந்து நடந்து அங்கு வந்தார்.
அவரது ஏடிசி சுந்தர் பிரதாப் ராணா அவரை வாசலில் இறக்கி விட்டு வெளியேறினார், ஏனெனில் அது ஒரு தனிப்பட்ட விருந்து, வெளியாட்களுக்கு அதில் அனுமதிக்கப்படவில்லை.
பிரேந்திரா நேராக தனது தாயாரிடம் சென்றார்.
படுக்கையறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திபேந்திராமுன்பும் அவர் நிறைய மது அருந்தியிருந்தாலும், திபேந்திரா ஒருபோதும் இந்த அளவுக்கு போதையில் காணப்பட்டதில்லை. அவரால் எப்போதும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடிந்தது.
திபேந்திரா திடீரென போதையில் இருந்ததை அங்கிருந்தோர் கவனித்தனர். அவரது நாக்கு தடுமாறிக் கொண்டிருந்தது, அவரால் நிற்க முடியவில்லை. சில நிமிடங்களில் அவர் சரிந்து விழுந்தார். அப்போது இரவு 8:30 மணி.
மன்னர் பிரேந்திரா அடுத்த அறையிலிருந்து பில்லியர்ட்ஸ் அறைக்குச் செல்லும் முன்பே, பராஸ், ராஜ்குமார் நிராஜன், மருத்துவர் ராஜீவ் ஷாஹி ஆகியோர் திபேந்திராவை கைகளையும், கால்களையும் பிடித்து தூக்கி அவரது படுக்கையறைக்குக் கொண்டு சென்றனர்.
அவரை தரையில் விரிக்கப்பட்ட மெத்தையில் படுக்கவைத்து, படுக்கையறை விளக்குகளை அணைத்துவிட்டு மீண்டும் விருந்துக்குத் திரும்பினர்.
"படுக்கையறையில் தனியாக இருந்த திபேந்திரா குளியலறைக்குச் சென்று வாந்தி எடுத்தார். பின்னர் அவர் ஒரு வீரரின் சீருடையை அணிந்தார். ஜாக்கெட், வீரர் அணியும் பூட்ஸ், கருப்பு தோல் கையுறைகள் அணிந்தார். அதன் பிறகு, அவர் தனக்குப் பிடித்த 9 மிமீ பிஸ்டல், எம்பி5கே (MP5K) சப் மெஷின் கன் மற்றும் கால்ட் (Colt) எம்-16 (M-16) ரைஃபிள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பில்லியர்ட்ஸ் அறையை நோக்கிச் சென்றார்" என்று ஜோனாதன் கிரெக்சன் தனது 'மாசாக்கர் அட் தி பேலஸ்' புத்தகத்தில் எழுதினார்.
பில்லியர்ட்ஸ் அறைக்குள் நுழைந்த திபேந்திராபில்லியர்ட்ஸ் அறையின் நடுவில் சில பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர். திடீரென்று, அவர்களின் கண்கள் ராணுவ சீருடையில் இருந்த இளவரசர் திபேந்திராவின் மீது விழுந்தது.
மன்னர் பிரேந்திராவின் உறவினர் கெட்கி செஸ்டர் பிபிசியிடம் பேசியபோது,"திபேந்திரா உள்ளே வந்தபோது, அவரது இரு கைகளிலும் துப்பாக்கிகள் இருந்தன. அவர் வீரருக்கான சீருடை அணிந்திருந்தார். கருப்பு கண்ணாடியும் அணிந்திருந்தார். இளவரசர் திபேந்திரா தனது ஆயுதங்களைக் காட்ட வந்துள்ளார் என்று என் அருகில் நின்ற பெண்ணிடம் சொன்னேன்"என்று கூறினார்.
அந்த நேரத்தில், நேபாள நரேஷ் (மகாராஜ் பிரேந்திரா) பில்லியர்ட்ஸ் அறைக்குள் வந்துவிட்டார். மது அருந்தக் கூடாது என்று மருத்துவர் அறிவுறுத்தியிருந்ததால், அவர் கையில் ஒரு கோக் கிளாஸ் வைத்திருந்தார்.
திபேந்திரா தனது தந்தையை பார்த்தார். அவரது முகத்தில் எந்த உணர்ச்சியும் தெரியவில்லை.
அடுத்த கணத்தில், அவர் தனது வலது கையில் இருந்த ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட ஏபி5-கே (AP5-K) சப் மெஷின் துப்பாக்கியை இயக்கினார். அதிலிருந்து பாய்ந்த பல தோட்டாக்கள் கூரையைத் தாக்கின. பிளாஸ்டர் துண்டுகள் கீழே விழுந்தன.
"நீ என்ன செய்கிறாய்?" என்று கேட்ட மன்னர்திபேந்திராவின் அடுத்த அசைவுக்காக காத்திருப்பது போல, விருந்தினர்கள் அனைவரும் சில நொடிகள் அசையாமல் நின்றனர். திபேந்திரா ஏதோ விளையாடுகிறார் என்றும், துப்பாக்கி தற்செயலாக சுட்டுவிட்டதாகவே அவர்கள் நினைத்தனர்.
"நேபாள மன்னர் ஆரம்பத்தில் பில்லியர்ட்ஸ் மேசைக்கு அருகில் அசையாமல் நின்றார். பின்னர் அவர் திபேந்திராவை நோக்கி நகர்ந்தார். ஒரு வார்த்தை கூட பேசாமல், திபேந்திரா பிரேந்திராவை மூன்று முறை சுட்டார். சிறிது நேரம் அவர் நின்றார். மெதுவாக தனது கண்ணாடியை மேசையில் வைத்தார்" என்று கிராக்சன் புத்தகத்தில் எழுதுகிறார்.
இதற்கிடையில், திபேந்திரா திரும்பி பில்லியர்ட்ஸ் அறையை விட்டு வெளியேறி தோட்டத்தை நோக்கி நடந்தார். திபேந்திராவால் சுடப்பட்ட தோட்டா, மகாராஜ் பிரேந்திராவின் கழுத்தின் வலது பக்கத்தில் பட்டதை அங்கிருந்தோர் மூன்று வினாடிகளுக்குப் பிறகு உணர்ந்தனர்.
"மன்னர் அதிர்ச்சியில் இருந்தார். அவர் மெதுவாக கீழே விழுவதை நாங்கள் பார்த்தோம்"கேட்கி செஸ்டர் கூறினார்
இதற்கிடையில், நேபாள மன்னரின் மருமகனான கேப்டன் ராஜீவ் ஷாஹி, தனது சாம்பல் நிற கோட்டை கழற்றி, மன்னரின் கழுத்தில் சுற்றி ரத்தப்போக்கை நிறுத்தினார். பிரேந்திரா இன்னும் சுயநினைவை இழக்கவில்லை. அவர் தனது மற்றொரு காயத்தை காட்டி, "ராஜீவ், வயிற்றிலும் உள்ளது" என்றார்.
பின்னர் மன்னர் பிரேந்திரா தலையை உயர்த்த முயன்று நேபாளியில் "கே கர்கேடோ" என்று முணுமுணுத்தார். அதாவது, "நீ என்ன செய்தாய்?" என்பதே அவரது கடைசி வார்த்தைகள்.
அதேநேரத்தில், திபேந்திரா மீண்டும் அறைக்குள் வந்தார். கையில் இருந்த இத்தாலியத் தயாரிப்பு துப்பாக்கியை கீழே போட்டார். அப்போது அவர் கையில் ஒரு எம்-16 துப்பாக்கி இருந்தது.
திபேந்திராவுக்கும் அந்தப் பெண்ணுக்கும் உள்ள உறவு அரச தம்பதியினருக்குப் பிடிக்கவில்லை.
திபேந்திரா மன்னர் பிரேந்திராவை ஏன் சுட்டார் என்ற கேள்வியை திபேந்திராவின் நண்பர் கெட்கி செஸ்டரிடம் பிபிசி கேட்டது.
"திபேந்திரா, தனது பாட்டிக்கும் அம்மாவுக்கும் பிடிக்காத ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அவர் செலவழிக்க விரும்பிய அளவு பணம் அவருக்கு கிடைக்கவில்லை. அதன் காரணமாக, அவர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார்" என்று கெட்கி செஸ்டர் கூறினார்.
இந்த சூழ்நிலையில் திபேந்திரா மிகவும் ஏமாற்றமடைந்தார்.
அவரது மனநிலையும் குழப்பத்தில் இருந்தது. இந்த செய்தி பிரிட்டனை எட்டியது. அங்கிருந்து லார்ட் காமோஸ், 2001 மே மாத தொடக்கத்தில் மன்னர் பிரேந்திராவுக்கு கடிதம் எழுதினார்.
இளவரசர் தான் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடியாததால் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக அவர் எழுதினார்.
திபேந்திரா தனக்குப் பிடித்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதைத் தடுப்பது மிகவும் கடினம் என்பதை ராணி ஐஸ்வர்யா புரிந்துகொண்டார்.
எனவே, திபேந்திரா தனது பெற்றோரின் பேச்சைக் கேட்கவில்லை என்றால், அவரது அரச பட்டம் பறிக்கப்படும் என்று திபேந்திராவிடம் தெளிவுபடுத்தினார்.
தந்தையை சுட்ட திபேந்திராஅந்த சமயத்தில் பிரேந்திராவின் இளைய சகோதரர் தீரேந்திர ஷா தலையிட முயற்சி செய்தார்.
கெட்கி செஸ்டர் கூறுகையில், "அப்போது மன்னர் பிரேந்திராவின் இளைய சகோதரர் தீரேந்திர ஷா, திபேந்திராவை தடுத்து நிறுத்தி, 'இதுவரை நடந்தது போதும். உன்னுடைய துப்பாக்கியை கொடு.' என்றார். இதைக் கேட்ட திபேந்திரா, தீரேந்திர ஷாவை நோக்கியும் சுட்டார். அதன்பின் திபேந்திரா முற்றிலும் நிலை தடுமாறி அனைவரையும் நோக்கி சுட ஆரம்பித்தார். எல்லோரும் சோஃபாவுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளுமாறு ராஜ்குமார் பராஸ் கூச்சலிட்டார்." என கூறுகிறார்.
கெட்கி செஸ்டருக்கு துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. கெட்கியின் தலையும் முடியும் ரத்தமாக இருந்ததால் அவர் இறந்துவிட்டதாக திபேந்திரா நினைத்துக்கொண்டார்.
ஒரு தோட்டா மன்னர் ஞானேந்திராவின் மனைவியின் (பராஸின் தாய்) நுரையீரலுக்குள் துளைத்து சென்றது. பிரேந்திராவின் தலைக்கு உள்ளே ஒரு தோட்டா பாய்ந்தது. ரத்தம் தோய்ந்த அவருடைய தொப்பி மற்றும் கண்ணாடி தரையில் விழுந்தது. அவர் அப்படியே கீழே விழுந்தார்.
காயமடைந்த தன் தந்தையை திபேந்திரா உதைத்த காட்சியை கெட்கி செஸ்டர் இன்னும் மறக்கவில்லை.
அதை நினைவுகூர்ந்த கெட்கி செஸ்டர், "கிட்டத்தட்ட இறந்துவிட்ட தன் தந்தையை திபேந்திரா உதைத்த காட்சி, என் மனதில் என்றும் மறையாமல் பதிந்துவிட்டது. தன் தந்தை உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்பதை திபேந்திரா அறிய விரும்பினார். எந்தவொரு கலாசாரத்திலும் இறந்தவர்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனர். ஆனால், தன் தந்தையை திபேந்திரா சுட்டதைவிட அவரை எட்டி உதைத்ததுதான் என்னை இன்னும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது." என்றார்.
ஏடிசி உதவியாளர்கள் குறித்த கேள்விநாராயண்ஹிட்டி அரண்மனையில் உள்ள திரிபுவன் பவனில் நேபாளத்தின் மன்னர் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சிலர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கி சூடு மூன்று முதல் நான்கு நிமிடங்களில் முடிந்துவிட்டது.
நேபாளத்தின் மிகவும் இக்கட்டான சூழலில் துப்பாக்கி சூடு சத்தத்தைக் கேட்டும், பயிற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்த ஏடிசி அதிகாரிகள் (ADC-aides-de-camp) எவரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை. தங்களின் அறைகளிலேயே அவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களின் அறைகள், பில்லியர்ட்ஸ் அறையிலிருந்து சிறிது தொலைவிலேயே இருந்தது.
அவர்கள் முயற்சித்திருந்தால் 10 நொடிகளில் பில்லியர்ட்ஸ் அறையை அடைந்திருக்க முடியும். விசாரணை குழு அறிக்கையின்படி, நான்கு ஏடிசி அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
பின்னால் இருந்து சுடப்பட்ட ராணி ஐஸ்வர்யாஇதனிடையே, பில்லியர்ட்ஸ் அறையிலிருந்து திபேந்திரா மீண்டும் வெளியேறி, தோட்டத்திற்குள் நடந்தார். அவரின் பின்னாலேயே ராணி ஐஸ்வர்யா ஓடினார். இளவரசர் நிரஞ்சனும் அவரை பின்தொடர்ந்தார். அதன் பின் இருமுறை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.
நிலேஷ் மிஸ்ரா தன்னுடைய 'என்ட் ஆஃப் தி லைன்' (End of the Line) எனும் புத்தகத்தில், "சமையல்காரராக பணியாற்றிய சாந்தகுமார் கட்கா என்பவர் ராணி ஐஸ்வர்யாவின் இறுதி தருணங்களை பார்த்தார். ராணி திபேந்திரா அறைக்கு செல்லும் படிக்கட்டுகளில் ஏற முயற்சித்தார். அவர் நேபாளி மொழியில் சத்தமாக கத்தினார். அவருடைய தலைக்குள் தோட்டா ஊடுருவியபோது, அவர் 7 படிக்கட்டுகளை கூட ஏறியிருக்கவில்லை. அந்த பளிங்கு படிக்கட்டிலேயே அவர் சரிந்துவிழுந்தார். அவர் பின்னாலிருந்து சுடப்பட்டார். திபேந்திராவால் சுடப்பட்ட கடைசி நபர் அவர் தான்." என எழுதியுள்ளார்.
தன் மகன் திபேந்திரா தன்னை சுட மாட்டான் என ராணி நினைத்திருந்தார், ஆனால் அது தவறாகிவிட்டது.
பின்னர் திபேந்திரா, தோட்டத்தில் உள்ள சிறிய குளத்தின் மீதுள்ள பாலத்துக்கு சென்றனர். அங்கு வெறிபிடித்தது போன்று ஓரிருமுறை கத்தினார், அதன்பின் இறுதியாக கடைசியாக துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.
அவர் கீழே விழுந்து கிடந்தார். தோட்டா ஒன்று அவருடைய தலையிலும் ஊடுருவியிருந்தது. அவருடைய இடது காதுக்கு பின்னால், ஒரு சென்டிமீட்டருக்கு தோட்டா நுழைந்த தடயம் இருந்தது. அவருடைய வலது காதுக்கு மேலே, தோட்டா வெளியேறிய அடையாளம் இருந்தது. இருவரும் ரத்த வெள்ளத்தில் இருந்தனர், ஆனால் திபேந்திரா உயிருடன் இருந்தார்.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மன்னர்மற்றொருபுறம், பலமுறை சுட்டும் மன்னர் பிரேந்திரா உயிருடன் இருந்தார். அவருடைய ஏடிசி உதவியாளர், ஜாக்குவார் காரின் பின்னிருக்கையில் அவரை கிடத்தி, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், அவரின் இரு காதுகளில் இருந்தும் ரத்தம் வந்துகொண்டிருந்தது. அவருடைய உடை ரத்தத்தால் தோய்ந்திருந்தது. அவரின் இதயத்துடிப்பு கிட்டத்தட்ட நின்றுவிட்டது, ஆனால், அவருடைய கைகள் சற்று இழுத்துக்கொண்டிருந்தது. அவர் ஏழு முதல் எட்டு முறை சுடப்பட்டிருந்தார்.
ஜாக்குவார் காருக்கு பின்னால் வந்துகொண்டிருந்த டொயோட்டா காரில் ராணி ஐஸ்வர்யாவின் உடல் இருந்தது. இரண்டு கார்களும் மருத்துவமனையை அடைந்தபோது மணி இரவு 9.15 ஆகியிருந்தது. நேபாளத்தின் சிறந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் இதயவியல் நிபுணர்கள் விரைந்து மருத்துவமனையை அடைந்தனர்.
காரிலிருந்து வெளியே எடுத்தபோதே ராணி இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் பச்சை நிற டொயோட்டா லேன்ட் க்ரூசர் காரும் மருத்துவமனையை நோக்கி வந்துகொண்டிருந்தது.
அதில், முன்னிருக்கையில் ராஜ்குமார் பராஸ் அமர்ந்திருந்தார். பின்னிருக்கையில் திபேந்திராவின் ஏடிசி கஜேந்திர போஹ்ரா மற்றும் ஜார்ஜு கார்க்கி இருவரும் இளவரசர் திபேந்திரா மற்றும் ராஜ்குமார் நிரஜ் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தனர். அது மிகவும் வித்தியாசமான சூழலாக இருந்தது. கொலையாளியும் சுடப்பட்டவர்களும் ஒரே காரில் அழைத்து வரப்பட்டனர்.
மருத்துவமனை படுக்கைகளுக்கு பற்றாக்குறைஅவர்கள் 9:30 மணிக்கு மருத்துவமனையை அடைந்தனர். சில நிமிடங்களிலேயே ராஜ்குமார் நிரஜன் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கிரேக்சன் எழுதுகையில், "இதனிடையே, நேபாளத்தின் சிறந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் உபேந்திரா தேவ்கோட்டா, மருத்துவர் ஒருவர் தேசிய உடையில், ரத்த வெள்ளத்தில் இருந்த ஒருவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்ததை பார்த்தார். அவருடைய கழுத்தில் லாக்கெட் ஒன்றும் தொங்கிக் கொண்டிருந்தது. அதில் சாய் பாபாவின் படம் இருந்தது. மருத்துவர் உபேந்திரா, முன்பு மன்னர் பிரேந்திராவை பார்த்திருந்தும், காயமடைந்திருந்த அவரை அடையாளம் காண முடியவில்லை" என எழுதியுள்ளார்.
மருத்துவமனையில் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையம் நிரம்பும் அளவுக்கு தன் குடும்ப உறுப்பினர்கள் பலரை இளவரசர் திபேந்திரா சுட்டிருந்தார்.
ஸ்டிரெச்சரில் திபேந்திரா அழைத்து வரப்பட்டபோது, ஒரு படுக்கை கூட காலியாக இல்லை. அவர் தரையில் படுக்கை ஒன்றில் கிடத்தப்பட்டார்.
திபேந்திராவின் தலையின் இருபுறத்திலிருந்தும் ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. மூச்சு விடும்போது அவர் பெரும் சத்தத்தை எழுப்பினார், அவருடைய ரத்த அழுத்தம் 100-60 என்ற அளவில் இருந்தது. சில நிமிடங்களிலேயே திபேந்திரா அறுவை சிகிச்சை அரங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மன்னராக்கப்பட்ட திபேந்திராஇதுகுறித்து செய்தி சேகரிக்க 2001ம் ஆண்டு ஜூன் 2 அன்று டெல்லியிலிருந்து காலை 10 மணியளவில், காத்மண்டுவை அடைந்தேன். ஆனால், இந்த படுகொலைகள் குறித்து நேபாள நாட்டு மக்களுக்கு எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், நேபாள வானொலியில் காலையிலிருந்து சோகமான இசை ஒலிபரப்பப்பட்டது.
இந்த படுகொலைகள் நடந்து 14 மணிநேரம் கழித்து காலை 11 மணியளவில் அந்த இசை நிறுத்தப்பட்டு, மன்னர் பிரேந்திர பீர் பிக்ரம் ஷா அதற்கு முந்தைய இரவு 9.15 மணியளவில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவருடைய இடத்தில் அவரின் மகன் திபேந்திரா மன்னராக அறிவிக்கப்பட்டார். அவர் தற்போது பணியாற்றும் நிலையில் இல்லாததால், இளவரசர் ஞானேந்திரா அவருக்கு பதிலாக ஆள்வார் என அறிவிக்கப்பட்டது. மன்னர் பிரேந்திரா எப்படி இறந்தார் என்பது குறித்து நேபாள மக்களுக்கு கூறப்படவில்லை.
இறுதிச் சடங்குக்கு திரண்ட மக்கள்ஜூன் 2, 2001 அன்று மதியம் அரசவை குடும்பத்தினரின் இறுதிச் சடங்குகள் மாலை 4 மணியளவில் தொடங்கியது, காத்மண்டுவின் மொத்த மக்களும் தெருக்களில் குழுமியிருந்தனர். நாடு முழுவதிலும் இருந்து பல ஆயிரக்கணக்கானோர் மன்னருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மொட்டை அடித்திருந்தனர்.
அதற்காக முடி திருத்துபவர்கள் பணமே வாங்கவில்லை. அரசவை குடும்பத்தை சேர்ந்த தீபக் பிக்ரம், அந்தி சாயும் மாலை பொழுதில் ஆர்யகாட்டில், அனைத்து உடல்களுக்கும் தீ மூட்டினார்.
இளவரசர் திபேந்திராவுக்கு நினைவு திரும்பவே இல்லை. ஜூன் 4ம் தேதி காலை 3.40 மணியளவில் அவரும் உயிரிழந்தார்.
நினைவு திரும்பாத, தன் தந்தையை கொன்ற ஒருவரால் நேபாளம் 54 மணிநேரத்திற்கு ஆளப்பட்டது.
அவருடைய இறப்புக்கு பின்பு, நேபாள மன்னர் பிரேந்திராவின் இளைய சகோதரர் ஞானேந்திரா, மூன்று நாட்களிலேயே நேபாளத்தின் மன்னரானார். ஆனால், நேபாளம் இந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை, 2008-ம் ஆண்டு நேபாளம் மன்னராட்சியை கைவிட்டு, மத சார்பற்ற குடியரசாக மாறியது. அத்துடன், உலகின் ஒரே இந்து தேசம் என்ற நேபாளத்தின் அடையாளமும் முடிவுக்கு வந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு