வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்று ஒருநாள் (செவ்வாய் கிழமை) கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளது மத்திய அரசு. கடைசி நாளான நேற்று வருமான வரி இணையதளம் முடங்கியதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இதுவரை 7.30 கோடிக்கும் மேற்பட்டோர் கணக்கு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வருமானவரி கணக்கு இன்று (நேற்று) தாக்கல் செய்யாதவர்களுக்கு வருமானத்திற்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும். வருமான வரி சட்டப்பிரிவு 234 எப்-ன் கீழ், தாமதமாக வருமான வரி தாக்கல் செய்பவர்கள் ரூ.5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி வந்தால், ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். அதே சமயம், ரூ.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் ஈட்டியிருந்தால், ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
வருமான வரி சட்டப்பிரிவு 234ஏ-ன் கீழ், கடைசி தேதிக்குப் பின், வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால், அதில் வருமான வரி நிலுவை இருந்தால், தாமதமாகும் ஒவ்வொரு மாதத்திற்கும் வருமான வரி நிலுவைக்கு 1 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும். வருகிற டிசம்பர் 31-ந்தேதி வரை திருத்தப்பட்ட மற்றும் தாமதமான வருமான வரி கணக்கை வட்டி மற்றும் அபராதத்துடன் சேர்த்து செலுத்த வேண்டும். இந்த காலக்கெடு அனைவருக்கும் பொருந்தாது.