சென்னையில் மீர்சாகிபேட்டை மார்க்கெட் அருகில் கடந்த ஜூலை மாதம் முகமது நஸ்ருதின் என்பவர் நடந்து சென்றுள்ளார்.
அப்போது திடீரென அவரை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. இதனால் முகமது நஸ்ருதின் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் முகமது நஸ்ருதினுக்கு ரேபிஸ் தொற்று இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அதனைத்தொடர்ந்து முகமது நஸ்ருதினை தீவிரமாக கண்காணித்து தனி அறையில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
எனினும் முகமது நஸ்ருதின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவ்வாறு ரேபிஸ் தொற்றால் முகமது நஸ்ருதின் உயிரிழந்து இருப்பது அப்பகுதியில் இருப்பவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது.