ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மிஷேல் வைலி என்ற பெண்ணுக்கும், ஜான் என்ற நபருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமண விழாக்களுக்கு மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வருவது வழக்கம். ஆனால், சில திருமணங்களில் அழையா விருந்தாளிகளாக முன்பின் தெரியாதவர்களும் வந்து விருந்து சாப்பிடுவது நடக்கும். இதேபோல், மிஷேல்-ஜான் தம்பதியின் திருமணத்தில் ஒரு அந்நியர் கலந்து கொண்டது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்தபோது, மணமக்களின் அருகே நின்ற ஒருவர் யாரென்றே அவர்களுக்கு தெரியவில்லை. இந்த மர்ம நபரை கண்டறிய மிஷேல் பல முயற்சிகள் செய்தும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. நான்கு ஆண்டுகளாக தொடர்ந்த இந்த மர்மத்துக்கு இறுதியாக பேஸ்புக் மூலம் விடை கிடைத்தது. அந்த புகைப்படத்தில் இருந்தவர் அயர்ஷையரைச் சேர்ந்த ஓவியரான ஆண்ட்ரூ என்பவர்.
அவர் தனது மனைவியுடன் வேறொரு திருமணத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், தவறுதலாக இடம் மாறி மிஷேல்-ஜான் திருமணத்திற்கு சென்றுவிட்டதாக பேஸ்புக்கில் ஒரு நண்பருடன் உரையாடியதை மிஷேல் கண்டறிந்தார். இதனை அறிந்த மிஷேல், தனது நான்கு ஆண்டு மர்மத்துக்கு விடை கிடைத்த மகிழ்ச்சியை சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.