சென்னை, செப்டம்பர் 15 : அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (Edappadi Palanisamy) செங்கோட்டையன் (Sengottaiyan) 10 நாட்கள் கெடு விதித்து இருந்தார். இந்த கெடு 2025 செப்டம்பர் 15ஆம் தேதியான இன்றுடன் முடிந்த நிலையில், செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற எனது கருத்தை புரிந்து கொள்ள வேண்டும் என அவர் கூறியிருந்தார். 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் சலசலப்புகள் இருந்து வருகிறது. குறிப்பாக, அதிமுகவில் செங்கோட்டை மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இருவருக்கு இருந்த வந்த பிரச்னை, தற்போது வெடித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என தெரிவித்தார். இதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடுவும் அவர் விதித்து இருந்தார். இதனைத் தொட்ரந்து, அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி நீக்கினார். தொடர்ந்து, செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 3,000 பேர் ராஜினாமா செய்தனர்.
Also Read : விஜய் பக்கம் சாயும் டிடிவி தினகரன்… 2026 தேர்தலில் புதிய கூட்டணி.. அவரே சொன்ன விஷயம்!
செங்கோட்டையனின் இந்த நடவடிக்கைக்கு ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். மேலும், அதிமுகவில் உள்ள சீனியர் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். செங்கோட்டையன் விதித்த 10 நாட்கள் கெடுவுக்கு எடப்பாடி பழனிசாமி எந்த பதிலும் அளிக்கவில்லை. இதற்கிடையில், செங்கோட்டையனும் டெல்லி சென்று அமித் ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியிருக்கிறார்.
செங்கோட்டையனின் அடுத்த திட்டம் என்ன?இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு விதித்த 10 நாட்கள் கெடு 2025 செப்டம்பர் 15ஆம் தேதியான இன்றுடன் முடிவடைந்தது. இதனை அடுத்து, ஈரோட்டில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். மாற்றான் தோட்டத்திற்கு மனம் உண்டு. மறப்போம் மன்னிப்போம். இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்பது தான் எது நோக்கமாக உள்ளது. அதிமுகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்று தான் அன்று மனம் திறந்து பேசினேன். எனது பேச்சுக்கு ஏராளமான வரவேற்பு கிடைத்துள்ளது.
Also Read : அழைக்கும் பாஜக மேலிடம்? டெல்லி செல்லும் இபிஎஸ்.. அதிமுகவில் பரபரப்பு!
புரிகிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்க கடமைப்பட்டிருக்கிறேன். அண்ணாவின் மறப்போம் மன்னிப்போம் என்ற கருத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். அதிமுக 2026 தேர்தலில் வெற்றி பெற எல்லாரும் உறுதுணையாக இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற எனது கருத்தை புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார். இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி 2025 செப்டம்பர் 16ஆம் தேதியான நாளை டெல்லி செல்கிறார். அதன்பிறகு, அதிமுகவில் நடக்கும் பிரச்னை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.