அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரண்டு நாள் பயணமாக டெல்லி கிளம்புகிறார். அவரது இந்தப் பயணம், அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் பா.ஜ.க.வுடனான கூட்டணி குறித்து பேசுவதற்காக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தலைவர்களை மீண்டும் இணைப்பது குறித்து செங்கோட்டையன் பேசியதும், பின்னர் அவர் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்ததும் அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாகவே, ஈபிஎஸ், அமித் ஷாவை சந்தித்து கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தப் பயணம் மேற்கொள்வதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி ஆகியோர்களும் உடன் சென்றுள்ளனர்.
செங்கோட்டையன் மூலம் அ.தி.மு.க.வின் உட்கட்சி நிலவரங்கள் குறித்து தெரியவந்ததையடுத்து, டெல்லி தலைமை ஈபிஎஸ்-க்கு அழைப்பு விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பின்போது பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் எடப்பாடி பழனிசாமி, புதிதான துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.
Edited by Siva