அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த டி.டி.வி. தினகரன், சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கெடு விதித்தது, கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் பின்னணியில், அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களிலேயே நடைபெற உள்ள நிலையில், அதிமுக தற்போது தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள அதிமுக, “மெகா கூட்டணி” பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் தேமுதிக இன்னும் ஆதரவு தராமல் இருக்கிறது; விஜய், பாஜகவுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளதால், அதிமுக-விஜய் கூட்டணி சாத்தியம் இல்லை. இந்நிலையில், வலுவான கூட்டணி அமைத்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும் என பாஜக வியூகங்கள் தீட்டி வருகிறது.
இந்த சூழலில், செங்கோட்டையன் திறந்த வெளியில், “பிரிந்தவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும்” எனக் கூறி, 10 நாள் கெடு விதித்தார். அதற்குப் பிறகு அவர் டெல்லி சென்று, அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாகத் தகவல்கள் வெளியாகின. இதனால், “பாஜக மேலிடம் மூலமாக எடப்பாடிக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது” என்ற பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் பரவின.
செங்கோட்டையன் டெல்லி வந்த சில நாட்களிலேயே, எடப்பாடி பழனிசாமியும் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை சந்திக்கிறார் எனக் கூறப்பட்டாலும், அமித்ஷாவையும் அவர் சந்திக்க வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், ஓபிஎஸ், தினகரனை மீண்டும் இணைக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது, பாஜக மேலிடத்துக்கு நேரடியாக அனுப்பிய “என் நிலைப்பாடு தெளிவானது” என்ற செய்தியாக அரசியல் வல்லுநர்கள் விளக்குகிறார்கள்.
மேலும், “சில பேரை கைக்கூலியாக வைத்து ஆட்டம் போடுகிறார்கள். அவர்கள் யாரென்று அடையாளம் கண்டுவிட்டோம். விரைவில் முடிவு கட்டப்படும்” என எடப்பாடி பேசியிருப்பது, கட்சிக்குள் தமக்கு எதிராக குரல் கொடுப்பவர்களுக்கு விடுத்த எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது. இதனால், செங்கோட்டையன் – எடப்பாடி மோதல் அதிமுகவின் உள் அரசியலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.