10 வருட காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதலன் வெட்டிக்கொலை! சத்தமில்லாமல் நடந்த ஆணவ படுகொலை
Top Tamil News September 16, 2025 08:48 PM

மயிலாடுதுறை அருகே 10 வருட காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து காதலனை சரமாரியாக வெட்டி கொன்ற மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே அடியமங்கலம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கு வைரமுத்து(28) என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். டூ வீலர் மெக்கானிக் வேலை பார்த்து வந்த வைரமுத்து அதே பகுதி பெரியகுளம் அருகே உள்ள பக்கத்து தெருவில் (காலணி தெரு) வசிக்கும் குமார் என்பவரின் மகள் கல்லூரி படிப்பை முடித்த மாலினி (26) என்பவரை 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.  இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்.

மாலினி சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு உள்ள நிலையில் அடிக்கடி இரு குடும்பத்தினருக்கும் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாலினியின் தாயார் விஜயா வைரமுத்து வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று வைரமுத்துவிடம்  பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மாலினியின் குடும்பத்தார் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இருதரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மாலினி வைரமுத்துவைதான் திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் மாலினியின் குடும்பத்தினர் தங்கள் மகள் மாலினியை நிராகரித்துள்ளனர். அதனைதொடர்ந்து மாலினி சனிக்கிழமை வைரமுத்துவின் வீட்டிற்கு சென்றுள்ளார். 

வைரமுத்துவிற்கும் –மாலினிக்கும் பதிவு திருமணம் செய்ய முயற்சித்தபோது திங்கட்கிழமை நாள் சரியில்லை வேறு ஒரு நாளில் செய்து வைப்பதாக வைரமுத்துவின் பெற்றோர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து மாலினி  திங்கட்கிழமை மதியம் வேலைக்காக சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் மெக்கானிக்கரை மூடி விட்டு இரு சக்கர வாகனத்தில் இரவு வீட்டிற்கு வந்த வைரமுத்துவை தெருவில் வழிமறித்த மர்மநபர்கள்  ஓட ஓட விரட்டிச் சென்று வைரமுத்துவை சராமாரியாக அறிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். கழுத்து மற்றும் இரண்டு கைகளிலும் வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றுவிட்டனர். உயிருக்கு போராடிய வைரமுத்துவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொண்டுபோய்  சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வைரமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து அசம்பாவிதம் ஏதும் ஏற்படாதவாறு 30க்கும் மேற்பட்ட போலீசார் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். தங்கள் மகனை காதலியின் குடும்பத்தினர் கொன்றுவிட்டதாக வைரமுத்துவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். டூவீலர் மெக்கானிக் ஷாப்பிற்கு சென்று வைரமுத்துவிடம் வாக்குவாதம் செய்யும்போது அப்பவே உன்னை தட்டியிருக்க வேண்டும் என்று மாலினியின் தாயார் விஜயா மிரட்டல் விடுக்கும் வீடியோ பதிவை மயிலாடுதுறை காவல்துறையிரிடம்  வழங்கியுள்ளனர். காதலி குடும்பத்தினர் இந்த கொலைசம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.