“கேப்டனை விஜய்யோடு கம்பேர் பண்ணாதீங்க”- பிரேமலதா விஜயகாந்த்
Top Tamil News September 16, 2025 10:48 PM

தே.மு.தி.க யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து முடிவெடுக்க இன்னும் எங்களுக்கு நேரம் வேண்டும் என தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.


அறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணி அருகே உள்ள அண்ணா சிலைக்கு தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மற்றும் தேமுதிக மூன்று கட்சிகளுக்கு தான் பூத் கமிட்டி உள்ளது. உச்ச நட்சத்திரங்களுக்கு மக்கள் கூட்டம் கூடுவது இயல்புதான். இதை நாங்கள் 1990 களில் இருந்து பார்த்து வருகிறோம். விஜயகாந்திருக்கும் அதிக அளவிற்கு கூட்டம் கூடியது. விஜய்க்கும் மக்கள் கூட்டம் கூடியது. விஜய் அந்த கூட்டத்தை முறையாக ஒழுங்குப்படுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். விஜய் திமுக மற்றும் பாஜகவை எதிர்த்து வருகிறார். அவரை அக்கட்சியினர் விமர்சனம் செய்து தான் பேசுவார்கள்.விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே அதிக வாக்கு சதவீதம் பெற்றவர்.  அவருடன் வேறு யாரையும் ஒப்பிடவே கூடாது.அவ்வாறு ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம்.


விஜய் யாரை மனதில் வைத்து பேசுகிறார் என்பது தெரியவில்லை. விஜய் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் விஜய் தான் பதில் அளிக்க வேண்டும். விஜய் குறித்து அவரிடம் கேட்காமல் மற்றவர்களிடம் கேள்வி கேட்பது தவறு. இனிமேல் கூட்டணி குறித்தும் விஜய் குறித்தும் என்னிடம் எந்த கேள்வியும் கேட்க வேண்டாம் என ஏற்கனவே கூறியுள்ளேன். எல்லா கட்சியும் எங்களுடைய நண்பர்கள் தான். கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் எங்களுக்கு நேரம் வேண்டும். விஜயகாந்த் இல்லாமல் நாங்கள் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் எங்களுடைய கட்சி வளர்ச்சியில் தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.