இத்தாலியில் உள்ள மவுண்ட் ஸ்ட்ராம்போலி எரிமலை வெடிக்கும் காட்சியை பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடலுக்கு நடுவே உள்ள ஒரு தீவில் பயணிக்க சென்றவர்கள், இந்த பயங்கரமான காட்சிக்குச் சாட்சியாக மாறியுள்ளனர். திடீரென வெடித்த எரிமலை காரணமாக கடலில் அலைகள் பெருக்கெடுத்து ஓடியதைக் காண முடிகிறது. நெருப்பும், புகையும் வானத்தை முழுவதும் மூடிய அந்த தருணத்தில், படகில் இருந்தவர்கள் தப்பியோட ஆரம்பித்தனர்.
அந்தக் கடற் பயணத்தை வழிநடத்திய படகு ஓட்டுநர், தன்னுடைய மொபைலில் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில், எரிமலை வெடித்த அந்த சில விநாடிகளில் கடலை கருப்பு நிற புகைமூட்டம் சூலும் காட்சி இடம்பெற்றுள்ளது. சற்று தாமதமாகியிருந்தால், உயிரிழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருந்ததாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வீடியோவில் உள்ள காட்சிகளைப் பார்த்தவர்கள் “இது சினிமா காட்சி மாதிரியே இருக்கு”, “புகையும் தண்ணீரும் ஒரே நேரத்தில் உயிரை வாங்கும் இடம் இது தான் போலிருக்கே!” என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த வீடியோ எந்த தேதியில் எடுத்தது? யாரும் காயம் அடைந்தார்களா? என்பதற்கான தெளிவான தகவல் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் உலகின் மிகச் சக்திவாய்ந்த மற்றும் 2 லட்சம் ஆண்டுகள் பழமையான எரிமலைகளில் ஒன்றான ஸ்ட்ராம்போலி எரிமலையின் சக்தி இன்னும் குறைந்ததில்லை என்பதை இது மறுபடியும் நிரூபிக்கிறது. தற்போது அந்த தீவிற்கு சுற்றுலா செல்லும் மக்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.