அமெரிக்காவின் டெக்சாஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். 50 வயதான சந்திரமௌலி நாகமல்லையா, அங்குள்ள ஒரு ஊழியரால் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்டார்.
பெங்களூருவில் வளர்ந்த சந்திரமௌலி முதலில் திப்பசந்திராவிலும் பின்னர் ஆர்டி நகர் பகுதியிலும் வசித்து வந்தார். தனது அன்பான இயல்பு மற்றும் புன்னகையால் அனைவரின் இதயத்தையும் சந்திரமௌலி வென்றிருந்தார் எனக் கூறுகிறார்கள் அங்கு வசிக்கும் மக்கள்.
அவரது நண்பர் பி.எஸ் வெங்கடேஷ் பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், "அவர் மீது கோபப்படுவதற்கு கடினமாக இருக்கும். அவர் உடனடியாக கையைப் பிடித்து, தனது புன்னகையால் மனதை வெல்வார்" என்று கூறினார்.
"கியூபாவிலிருந்து சட்டவிரோதமாக குடியேறிய ஒருவரால் தனது மனைவி, மகனின் முன்னிலையில் சந்திரமௌலி கொடூரமாக கொல்லப்பட்டதாக கூறப்படும் "கொடூரமான கொலை" பற்றிய செய்திகளை அறிந்திருக்கிறேன். இது நமது நாட்டில் ஒருபோதும் நடந்திருக்கவே கூடாத ஒன்று" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் டிரம்ப் கூறினார்.
சந்திரமௌலியை அறிந்தவர்கள் அவரைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?டல்லாஸில் இருந்து வந்த தகவல்களின்படி, சந்திரமௌலியை ஒரு மோட்டல் ஊழியரான யோர்டானிஸ் கோபோஸ்-மார்டினெஸ் தாக்கியுள்ளார்.
சந்திரமௌலி, மோட்டலில் வேலை பார்த்த மற்றொரு ஊழியரிடம், மார்டினெஸுக்கு துணி துவைக்கும் இயந்திரத்தை பழுது பார்க்க அறிவுறுத்துமாறு கேட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் பலமுறை குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
அவர் வசித்த பகுதியில் வசிக்கும் ஒருவர்,"நாங்கள் பார்த்தது மிகவும் பயங்கரமான வீடியோ" என்று இதுகுறித்து கூறினார்.
சந்திரமௌலி முன்பு திப்பசந்திராவில் ஒரு சிறிய உணவகத்தை நடத்தி வந்தார்.
பின்னர் ஆர்.டி.நகருக்கு குடிபெயர்ந்த அவர், அங்கு ஒரு தங்கும் விடுதியை நடத்தியுள்ளார்.
"எங்கள் எல்லாருக்கும் அவரைத் தெரியும். அவர் மிகவும் நட்பாக பழகக்கூடியவர். நல்ல நண்பர். அவருக்கு நடந்த சம்பவம் குறித்து அறிந்ததும், நாங்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தோம். எங்கள் குழுவில் உள்ள அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பலரால் அதை நம்பவே முடியவில்லை" என்று திப்பசந்திராவைச் சேர்ந்த முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் அபிலாஷ் ரெட்டி பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.
சந்திரமௌலி மீது யாரும் எந்த குறையும் கூறியதில்லை என்று அவரது நண்பர் வெங்கடேஷ் கூறினார்.
"அவர் கொலை செய்யப்பட்டார் என்பதை நம்ப முடியவில்லை. அவர் ஒரு தவறான நபர் அல்ல. இந்தக் கொலையில் ஏதோ தவறு இருக்கிறது, அதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை," என்று அவர் கூறினார்.
ஆர்.டி. நகரில் அரசு ஊழியராக இருக்கும் மற்றொரு நபர் இதுகுறித்து பேசுகையில், (பெயர் வெளியிட விரும்பவில்லை), "அவர் மிகவும் நல்ல மனிதர். செய்தியைப் பார்த்தபோது நாங்கள் மிகவும் வருத்தப்பட்டோம். அவரது குடும்பத்தினரும் மிகவும் நல்லவர்கள். அவரது மகன் என் மகனின் நண்பன்" என்று கூறினார்.
அவர்கள் இருவரும் ஒன்றாக விளையாடுவார்கள் என்று கூறிய அவர், "சந்திரமௌலியின் மகன் கௌரவ் நல்ல நண்பனாக இருந்ததால் என் மகன் மிகவும் வருத்தப்படுகிறான்" என்று தெரிவித்தார்.
சந்திரமௌலியின் உறவினர்களும் டல்லாஸில் குடியேறி, ஒரு மோட்டலை நடத்தி வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அப்பகுதியில் வசிக்கும் மற்றொரு நபர், "யாரோ ஒருவர் இப்படிச் செய்ததால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். அவர்களுடையது மிகவும் அமைதியான குடும்பம். அவர்கள் எப்போதும் சிரித்துக் கொண்டே இருந்ததை நாங்கள் நினைவில் கொள்கிறோம்" என்றார்.
சந்திரமௌலியின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. இப்போது அவர் திப்பசந்திரா வீட்டிலிருந்து உறவினர் வீட்டிற்குக் குடிபெயர்ந்துள்ளார்.
டிரம்ப் கூறியது என்ன?இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், இது வெறும் கொலை மட்டுமல்ல, அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் குடியேற்றக் கொள்கை தொடர்பான ஒரு தீவிரமான கேள்வியை எழுப்புகிறது என்று கூறினார்.
"டெக்சாஸின் டல்லாஸில் சந்திரா நாகமல்லையா கொலை செய்யப்பட்ட கொடூரமான செய்தியை நான் இப்போது தான் பெற்றேன்," என்று டிரம்ப் பதிவிட்டிருந்தார்.
"அவர் ஒரு மரியாதைக்குரிய மனிதர், சட்டவிரோத கியூப குடியேறியால் தனது மனைவி மற்றும் மகனுக்கு முன்னால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இது போன்றவர்கள் நம் நாட்டில் ஒருபோதும் இருக்கக்கூடாது"என்று இப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குற்றம் சாட்டப்பட்ட நபர், இதற்கு முன்பு பல கடுமையான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
"இந்த நபர், குழந்தைகளிடம் அத்துமீறுவது, கார் திருட்டு உள்ளிட்ட கடுமையான குற்றங்களுக்காக இதற்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளார்.
"கியூபா அத்தகைய நபரை தங்கள் நாட்டில் வைத்திருக்க விரும்பவில்லை. திறனற்ற ஜோ பைடன் தலைமை வகித்த வேளையில் அவர் நாட்டுக்குள் மீண்டும் வந்துள்ளார்," என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியில், குடியேற்றக் கொள்கையின் கடுமையான நிலைப்பாட்டைக் மேற்கோள் காட்டி, "சட்டவிரோத குடியேறிகள் மீது மென்மையாக நடந்து கொள்ளும் நேரம் முடிந்துவிட்டது" என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின்படி, கோபோஸ்-மார்டினெஸ் ஒரு சட்டவிரோத குடியேறி, அமெரிக்காவிலிருந்து வெளியேற்ற அவருக்கு எதிராக இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அவர் டல்லாஸ் தடுப்பு மையத்தில் காவலில் இருந்ததாக அத்துறை கூறுகிறது, ஆனால் "அவரது குற்ற பின்னணி" கியூபா அவரை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் இந்த ஆண்டு ஜனவரியில் மேற்பார்வை உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு