பிரான்சைச் சேர்ந்த ஜூலியா ஷைனோ என்ற பெண் இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் தனது உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட ஒரு கலாசார மாற்றத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததையடுத்து, அது வைரலாக பரவி வருகிறது. குழந்தைப் பருவத்தில் பீட்சா, பர்கர் வரை ஸ்பூன், ஃபோர்க் கொண்டு சாப்பிடும் பழக்கம் கொண்டிருந்த ஜூலியா, இந்தியாவிற்கு வந்த பின், இந்தியர்கள் கையால் உணவை ரசிப்பது அவரை ஈர்த்துள்ளது. தற்போது அவர் அனைத்தையும் கையால் சாப்பிட பழகி இருப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
“முதலில் இது ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. கொஞ்சம் விதிவிலக்காக கூட தோன்றியது. அதன் பின் ஒரு ஸ்பூனால் நான் உணர முடியாத சுவைகளை என் கை கொண்டு உணர முடிந்தது,” என ஜூலியா தெரிவித்துள்ளார். டிசைனர் என்ற பாணியில் யோசிக்கும்போது, உணவின் சுவையை உருவாக்கும் விஷயங்களில் பார்வை மட்டுமல்ல, மற்ற உணர்ச்சிகளும் மிக முக்கியம் என்பதை உணர்த்திய அனுபவமாக இது இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான அவரது பதிவு சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றது. “பீட்சா-வைக் கூட ஃபோர்க் கொண்டு சாப்பிட்டீர்களா?” என நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.