திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் 2025 -ம் ஆண்டு இதுவரை 17 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 18 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே சுப்பிரமணியபுரம் பொத்தையை சேர்ந்த முதியவர் பாலசுப்பிரமணியன் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரிடம், பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நேற்று குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த அம்பாசமுத்திரம் உட்கோட்ட டி.எஸ்.பி. சதீஷ்குமார்,அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர், திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் 2025 -ம் ஆண்டு இதுவரை 17 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 18 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில், ஒரு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும், ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.