மக்கள் ஷாக்..! இட்லி, தோசை விலை 10 ரூபாய் உயர்வு..!
Top Tamil News September 16, 2025 10:48 PM
தமிழகத்தில் அமைப்பு சார்ந்த பிரிவில் சிறியது, பெரியது, நடுத்தரம் என, சராசரியாக, 50,000 உணவகங்கள் உள்ளன. இது தவிர, தள்ளுவண்டி உணவகம், 'டிபன் சென்டர்' உள்ளிட்ட அமைப்புசாரா உணவகங்களும் உள்ளன.

சைவ உணவகங்களில், இட்லி, தோசை, சாம்பார் இட்லி, பொங்கல், பூரி, கிச்சடி, தோசை வகைகள், மதிய சாப்பாடு, மஷ்ரூம் பிரைடு ரைஸ், புலாவ், மஷ்ரூம் பிரியாணி, பனீர் பிரைடு ரைஸ், புலாவ், பனீர் பிரியாணி, கோபி பிரைடு ரைஸ் என, பல உணவு வகைகள் விற்கப்படுகின்றன.

அசைவ உணவகங்களில், மட்டன், சிக்கன் பிரியாணி, இறால், மீன், சிக்கன் 65, ஆட்டுக்கால் பாயா உட்பட, பல்வேறு உணவு வகைகள் விற்கப்படுகின்றன.

மளிகை பொருட்கள், எண்ணெய் வகைகள், காய்கறி, சமையல் காஸ் சிலிண்டர், கடை வாடகை, மின் கட்டணம் போன்றவற்றை உள்ளடக்கி, உணவகங்களில் உணவு பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடந்த ஏப்ரலுடன் ஒப்பிடும்போது, இம்மாதம் வணிக சமையல் காஸ் சிலிண்டர் விலை, 183 ரூபாய் குறைந்து, 1,738 ரூபாயாக உள்ளது. இதேபோல், அரிசி, காய்கறி, மளிகை பொருட்களின் விலைகளும் பெரிதாக அதிகரிக்கவில்லை.

ஆனால், கடந்த ஏப்ரலுடன் ஒப்பிடும்போது, தற்போது பல உணவகங்களில் இட்லி, தோசை, பரோட்டா என, ஒவ்வொரு உணவு பொருளின் விலையும் சராசரியாக, 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

மஷ்ரூம், பனீர், கோபி புலாவ், பிரியாணி விலை, 20 - 30 ரூபாய் வரை அதிகரித்து, 250 ரூபாய் - 300 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. மட்டன் பிரியாணி, 300 ரூபாய் - 400 ரூபாய்க்கும், சிக்கன் பிரியாணி, 200 ரூபாய் - 250 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.

அசைவ உணவு

பிரியாணிக்கு இணையாக, சைவ பிரியாணி வகைகளின் விலை உயர்ந்து வருவது, வாடிக்கையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உணவகங்களில் உணவு பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதுடன், சரியான எடையில் வழங்குவதை உறுதி செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.