உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவில் வசித்து வருபவர் தான் 13 வயது சிறுவன். இவர் அங்குள்ள பள்ளியில் 6ம் வகுப்பு பயின்று வந்தார். இதற்கிடையில் ஆன்லைன் கேம் விளையாடுவதில் ஆர்வத்துடன் இருக்கும் சிறுவன் தினசரி அதில் மணிகணக்கில் நேரம் செலவழித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுவனின் தந்தை தன் பேங்கில் இருந்து பணம் எடுப்பதற்காக வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு தன் வங்கி கணக்கில் இருந்த ரூ.14 லட்சம் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக வங்கி ஊழியர்களிடம் கேட்டபோது, ஆன்லைன் விளையாட்டின் மூலம் பணம் இழந்தது தெரியவந்தது.
இதையடுத்து வீடு திரும்பிய அவர் தன் மகனிடம் ஆன்லைன் விளையாட்டில் பணம் இழந்தது குறித்து கண்டிப்புடன் கேட்டுள்ளார். இதன் காரணமாக மன உளைச்சலில் காணப்பட்ட அந்த சிறுவன் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.