புதிய சர்வதேச நகரம்; மதுராந்தகம் தேர்வு!
Seithipunal Tamil September 18, 2025 10:48 AM

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய சர்வதேச நகரம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை, டெல்லி, மும்பை, போன்ற மாநகரங்களில் இருக்கக்கூடிய போக்குவரத்து நெரிசல், காற்றின் தரம் குறைதல், சுற்றுச்சூழல் சீர்கேடு, மக்கள் தொகை பெருக்கம் போன்ற பலவிதமான பிரச்சினைகள் குறைக்கும் நோக்கில் துணை நகரங்கள் உருவாக்கப்படுகின்றன.மேலும் அந்த நகரங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், நிதி நுட்ப வணிக மண்டலங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், வர்த்தக மையங்கள், மாநாட்டுக் கூடங்கள் மட்டுமன்றி, அரசு மற்றும் தனியார் துறையின் மூலம் கல்வி மற்றும் சுகாதாரச் சேவைகள் அளிக்கும் நிறுவனங்களும்  அமைக்கப்படும்.

அந்தவகையில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி, 2,000 ஏக்கரில் சர்வதேச நகரம் உருவாக்க, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஐந்து இடங்களை அடையாளம் கண்ட ஆய்வு நிறுவனங்கள் டிட்கோவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளன என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதனடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய சர்வதேச நகரம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், சர்வதேச நகரம் அமைப்பதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் டெண்டர் கோரியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் இந்த நகரத்தில் சமூகத்தின் உயர் வருவாய் கொண்ட வகுப்பினர், மத்திய தர வகுப்பினர் மற்றும் குறைந்த வருவாய் கொண்ட வகுப்பினர் என அனைவருக்குமான வீட்டு வசதிகள் நிறைந்த பன்னடுக்குக் கட்டடங்கள் கொண்டதாக இந்நகரம் அமையும். விரிவான சாலைகள், தகவல் தொழில்நுட்ப மற்றும் பசுமை மின்சக்தி அமைப்புகள், பகிர்ந்த பணியிடச் சேவை மற்றும் நகர்ப்புரச் சதுக்கங்கள், பூங்காக்கள் போன்ற பொழுது போக்குச் சேவை கட்டமைப்பு வசதிகளும்  இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.