நிலநடுக்கம்
ரஷ்யாவில் கம்சட்கா பகுதியில் ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் கிழக்கு எல்லையில் பசிபிக் கடலை ஒட்டி அமைந்துள்ள கம்சட்கா தீபகற்ப பகுதியில் அதிகாலை 12.28 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய நிலநடுக்க மையத்தின் தகவலின்படி, 7.5 ரிக்டராக பதிவான இந்த நிலநடுக்கம், பூமியின் 85 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து 10 நிமிட இடைவெளியில் மீண்டும் ஒரு 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த தொடர் நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் பலமாக குலுங்கிய நிலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.
முன்னதாக இதேபோல கம்சட்காவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பசிபிக் கடலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு அமெரிக்கா வரை சுனாமி எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தற்போதும் பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அமெரிக்காவின் ஹவாய் தீவுகள், அலாஸ்கா பகுதிகளில் சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K