பம்புசெட்டில் வைத்து செம்மரக் கட்டைகள் கடத்தல் - திருப்பத்தூரில் பரபரப்பு.!!
Seithipunal Tamil September 19, 2025 11:48 PM

திருப்பத்தூர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள ஒரு பம்பு செட்டிற்குள் செம்மரக்கட்டைகளை சிலர் பதுக்கி வைத்து, அதனை வெளி மாநிலத்திற்கு கடத்த இருப்பதாக திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து வனத்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றபோது அங்கு 3 பேர் செம்மரக்கட்டைகளை காரில் ஏற்றிக்கொண்டு இருந்தனர். உடனே அவர்கள் வனத்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

உடனடியாக அவர்களை விரட்டி சென்ற வனத்துறையினர் அவர்களில் ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில், அவர் திருப்பத்தூர் அருகே கொடுமாம்பள்ளி கிராமத்தை சேர்ந்த சேகர் என்பதும், ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகளை கொண்டு வந்து, சேகரின் இடத்தில் வைத்து, அங்கிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதைகேட்டு அதிர்ந்து போன வனத்துறையினர் சேகரை கைது செய்து, அங்கிருந்த 820 கிலோ எடை கொண்ட 29 செம்மரக்கட்டைகள், 3 கார்கள், 2 இருசக்கர வாகனங்கள், ரம்பம், அரிவாள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய இரண்டு பேரையும் வனத்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.