நாளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாகப்பட்டிணத்தில் பரப்புரை மேற்கொள்ள உள்ள இடம் மாற்றப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகி வருகிறார் நடிகர் விஜய். இந்நிலையில் மாநாட்டை தொடர்ந்து தற்போது மாவட்டங்கள்தோறும் ’மக்கள் சந்திப்பு பிரச்சாரம்’ மேற்கொண்டு வருகிறார் விஜய். அவ்வாறாக கடந்த சனிக்கிழமை திருச்சி, அரியலூரில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், நாளை நாகப்பட்டிணம், திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
விஜய் பிரச்சாரம் செய்வதற்காக கீழ்வேளூர் ரவுண்டானா, புத்தூர் ரவுண்டானா, அபிராமி அம்மன் சன்னதி, அவுரி திடல், காடம்பாடி மைதானம், நாகூர் பேருந்து நிலையம், வேளாங்கண்ணி ஆர்ச் உள்ளிட்ட 7 இடங்களில் ஒன்றில் அனுமதி அளிக்கும்படி தவெகவினர் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர்.
காவல்துறை புத்தூர் ரவுண்டானா பகுதியில் பிரச்சாரத்திற்கு அனுமதி அளித்ததுடன், பொது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொண்டர்கள் நடந்துக் கொள்ளக்கூடாது என நிபந்தனைகள் விதித்தனர். இந்நிலையில் விஜய் பிரச்சாரம் செய்ய புத்தூர் ரவுண்டானாவிற்கு பதிலாக அண்ணா சிலை அருகே அனுமதிக்க வேண்டும் என தவெகவினர் கோரிக்கை விடுத்த நிலையில் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அதனால் பிரச்சாரம் அண்ணா சிலை அருகே நடக்க உள்ளது.
மேலும் காவல்துறை நிபந்தனைகளின்படி புத்தூர் அண்ணா சிலைக்கு மதியம் 12.30 மணிக்கு விஜய் வருவார் என தவெக தெரிவித்துள்ளது.
Edit by Prasanth.K