மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், திமுகவுடன் கொண்டுள்ள உறவு சாதாரண கூட்டணி அல்ல, அதற்கு மேல் புனிதமான தொடர்பு என்று தெரிவித்துள்ளார்.
சென்னையின் ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவையில், மக்கள் நீதி மய்யத்தின் 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுக்கு எதிர்கால பணிகள், தேர்தல் தயாரிப்புகள் குறித்து வழிகாட்டினார். இந்த ஆலோசனைக் கூட்டங்கள் மண்டல வாரியாக நான்கு நாட்கள் நடைபெறவுள்ளன.
முதல்நாளாக சென்னை மண்டல நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் பங்கேற்றனர். அப்போது கமல்ஹாசன், “நான் திமுகவில் சேர்ந்துவிட்டதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் இது கூட்டணி மட்டுமல்ல, அதற்கு மேலான புனிதமான தொடர்பு. திமுக, நீதிக் கட்சியில் இருந்து தோன்றியது.
மக்கள் நீதி மய்யத்திலும் அதே நீதிச் சிந்தனை உள்ளது. மய்யத்தின் குரல் அனைவரின் செவியிலும் ஒலிக்கும். திராவிட சிந்தனை நாடு முழுவதும் பரவியுள்ளது, அதை இந்தியா புரிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்துள்ளது. கணக்கெடுப்பு வந்தால் அதன் தாக்கத்தை காணலாம்” என்று வலியுறுத்தினார்.