Robo Shankar: விஜய் டிவியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக பல நிகழ்ச்சிகளிலும் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி இவரை ரசிகர்களிடம் அதிகம் பிரபலமடைய வைத்தது. ரோபோ போல நடனமாடி இவர் பிரபலமானதால் இவரின் பெயருக்கு முன் ரோபோ வந்தது. திருமணம் ஆகி இவருக்கு இந்திரஜா என்கிற மகள் இருக்கிறார். ஒரு சிறந்த மிமிக்ரி கலைஞராகவும் ரோபோ சங்கர் வலம் வந்தார்.
சினிமாவில் எண்ட்ரி:டிவி நிகழ்ச்சிகள் பிரபலமானதை தொடர்ந்து சினிமாவிலும் சின்ன சின்ன வேடங்கள் கிடைத்தது. ஒரு கட்டத்தில் அவருக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தது. வேலைக்காரன், மாரி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, விஸ்வாசம் போன்ற படங்களில் இவருக்கு அதிக காட்சிகள் கிடைத்தது.
மதுப்பழக்கத்தால் உடல்நலம் பாதிப்பு:நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஒரு வருடத்திற்கு முன்பு இவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிக மதுப் பழக்கம் காரணமாக மஞ்சள் காமாலை நோயால் அவர் பாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. சிகிச்சைக்கு பின் குணமடைந்த ரோபோ சங்கர் மதுப் பழக்கத்தை விட்டு விட்டதாகவும் இவர் கூறியிருந்தார்.
தற்போது சில படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில்தான், இன்று காலை படப்பிடிப்பு தளத்தில் திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அருகில் இருந்த மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு அதன்பின் ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ரோபோ சங்கர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் மரணம் அடைந்திருக்கிறார்.
கமல்ஹாசன் இரங்கல்:ரோபோ சங்கர் கமலின் தீவிரமான ரசிகர். பலமுறை கமலஹாசனை குடும்பத்துடன் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் மரணம் அடைந்திருக்கும் நிலையில் கமலஹாசன் தனது சமூக வலைத்தள பக்கங்களில் ரோபோ சங்கருக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
அதில், ரோபோ சங்கர்.. ரோபோ புனைப்பெயர் தான்.. என் அகராதியில் நீ மனிதன்.. ஆதலால் என் தம்பி.. போதலால் மட்டும் என்னை விட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய்.. என் வேலை நான் தங்கி விட்டேன்.. நாளையை எமக்கென நீ விட்டு சென்றதால் நாளை நமதே’ என பதிவிட்டு இருக்கிறார்.