கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது, ஆனால் சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கிறீர்களா? சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலாக இருக்கிறதா?
இவை அனைத்தும் சிறுநீர் பாதை தொற்றின் (UTI) பொதுவான அறிகுறிகள். இந்தத் தொற்று ஏற்பட்டால், சிறுநீர் கழிப்பது மிகுந்த வேதனை அளிக்கலாம்.
உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400 மில்லியன் மக்கள் சிறுநீர் பாதை தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தொற்று ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் பாதிக்கலாம். ஆனாலும், பெண்களில் இது மிகவும் பொதுவானது.
உலகெங்கிலும் உள்ள பெண்களில் பாதிப் பேர், தங்கள் வாழ்க்கையில் குறைந்தபட்சம் ஒருமுறையாவது சிறுநீர் பாதை தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
உலகளவில் பொதுவாக காணப்படும் தொற்றுகளில் ஒன்றான சிறுநீர் பாதை தொற்றுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து, இன்னும் பல கேள்விகள் எழுகின்றன. ஏனெனில் ஆண்டிமைக்ரோபியல் மருந்துகளுக்கு கிருமிகளின் எதிர்ப்பு (antimicrobial resistance) அதிகரித்து வரும் இந்த காலத்தில், இந்த தொற்றுக்கு திறம்பட சிகிச்சை அளிக்க முடியுமா என்பது ஒரு முக்கியமான சந்தேகமாக உள்ளது.
அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளவும்,அதனைத் தடுக்கும் வழிகளை அறியவும், சில நிபுணர்களிடம் பிபிசி பேசியது.
சிறுநீர் பாதை தொற்று என்பது சிறுநீர்க்குழாய் (நமது சிறுநீர் வெளியேறும் குழாய்), சிறுநீர்ப்பை, அல்லது சில கடுமையான சந்தர்ப்பங்களில் சிறுநீரகம் வரை ஏற்படும் தொற்று.
பெரும்பாலும், பாக்டீரியாக்கள் சிறுநீர் பாதை வழியாக சிறுநீர் பாதைக்குள் நுழைவதன் மூலம் இது உருவாகிறது.
அடிக்கடி இந்த பாக்டீரியாக்கள் குறிப்பாக E.coli பாக்டீரியா, மலக்குழாய் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலிருந்து வருகிறது.
பெண்களின் சிறுநீர்க்குழாய்கள் ஆண்களை விட குறுகியது என்பதால், பாக்டீரியாக்கள் எளிதாகச் சென்று தொற்று ஏற்படுத்திவிடும்.
அதனால், அதிகமான பெண்களும், சிறுமிகளும் இந்த பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
மாதவிடாய் நின்ற பிறகு பெண்களில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு குறையும். இந்த ஹார்மோன் பெண்களின் பிறப்புறுப்பு பகுதியில் பாக்டீரியாவின் நல்ல சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
அதனால் ஈஸ்ட்ரோஜன் குறைந்தால், அந்த சமநிலை குலைந்து, தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
இந்தத் தொற்றுக்கான அறிகுறிகள் என்ன?சிறுநீர் பாதை தொற்றின் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும், ஆனால் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (NHS) குறிப்பிடக்கூடிய மிகவும் பொதுவான அறிகுறிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல் எரிச்சலடைதல், குழப்பமாக காணப்படுதல் போன்று நடத்தையில் மாற்றங்கள் தென்படலாம்.
குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தல், மற்றும் வாந்தியெடுத்தல் ஆகிய அறிகுறிகளும் சிறுநீர் பாதை தொற்றை வெளிப்படுத்தலாம்.
சிறுநீர் பாதை தொற்று தானாகவே குணமாகி விடுமா?"சில பெண்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியே சிறுநீர் பாதை தொற்றை சரி செய்து விடும். ஆனால் சில பெண்களுக்கு கண்டிப்பாக ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தேவைப்படும்."என்கிறார் லண்டனில் உள்ள விட்டிங்டன் மருத்துவமனையின் சிறுநீரகவியல் ஆலோசகர் டாக்டர் ராஜ்விந்தர் காஸ்ரியா.
நாம் ஏன் இந்த இரண்டு நிலைகளில் ஒன்றை எதிர்கொள்கிறோம் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
ஆண்டிமைக்ரோபியல் (antimicrobial) எனப்படும் கிருமி எதிர்ப்பு அதிகரித்து வரும் இந்நேரத்தில், இது ஆராய்ச்சியாளர்களிடையே மிக முக்கியமான கேள்வியாக உள்ளது.
சிறுநீர் பாதை தொற்று உலகளவில் ஆன்டிபயாட்டிக் அதிகம் வழங்கப்படும் நோய்களில் ஒன்றாகும். அதனால், ஆண்டிபயாட்டிக் தேவையில்லாத சிகிச்சையை கண்டுபிடிப்பது மருத்துவ துறையின் முக்கிய இலக்காக உள்ளது.
மருத்துவர் கேத்தரின் கீனன், தான்சானியா, கென்யா மற்றும் உகாண்டா உள்ளிட்ட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் மருந்து எதிர்ப்பு சிறுநீர் பாதை தொற்றுகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
மருத்துவமனைக்கு வந்தவர்களில், சிறுநீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டவர்களில் சுமார் பாதி பேருக்கு பல மருந்துகளுக்கும் எதிர்ப்பு காட்டும் தொற்று இருந்தது.
மேலும், சமூக கட்டமைப்பாலும், கூச்ச சுபாவத்தாலும் பல பெண்கள் தங்கள் அறிகுறிகளை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை, அதேபோல் மருத்துவரிடம் அத்தியாவசிய சிகிச்சை பெறுவதையும் தவிர்த்துவிடுகிறார்கள்.
"அவர்கள் தங்களை மறைத்துக் கொள்வார்கள். ஏனெனில், தங்களது அறிகுறிகள் பாலியல் நோய்களுடன் (STDs) தொடர்புடையதாக இருக்கலாம் என்று எண்ணுவார்கள். சிலர், இது துணையிடமிருந்து வந்தது, அதனால் அவர் ஏமாற்றியிருக்கலாம் என்பதாகவும் நினைப்பார்கள்," என்கிறார் மருத்துவர் கீனன்.
"எனக்கு என் உடலில் என்ன பிரச்னை என்று தெரியவில்லை… நான் பாதிக்கப்பட்டு விட்டேன் போல," என்று பலர் சொல்வதை நாங்கள் கேட்டிருக்கிறோம். அவர்கள் உண்மையில் அந்தக் களங்க உணர்வையும், விரக்தியையும் வெளிப்படுத்தினார்கள்"என்றும் அவர் கூறுகிறார்.
குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் (Global Burden of Disease) ஆய்வின்படி, சிறுநீரக பாதை தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 50% க்கும் மேற்பட்டோர் கவலை, மனசோர்வு போன்ற உளவியல் பிரச்னைகளை அனுபவிக்கிறார்கள்.
சிறுநீர் பாதை தொற்று ஒரு தொற்று நோயாக வகைப்படுத்தப்பட்டாலும், அவை மற்றவர்களுக்கு பரவக்கூடியவை அல்ல, மேலும் பாலியல் ரீதியாக பரவும் நோயும் அல்ல.
ஆனால், உடலுறவு கொள்ளும் போது மலக்குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் சிறுநீர்க்குழாய்க்கு நகர்ந்து, சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
உடலுறவுக்குப் பிறகு, முடிந்தவரை விரைவில் சிறுநீர் கழிக்குமாறு பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை பரிந்துரைக்கிறது. அப்படி செய்யும்போது, சிறுநீர்க்குழாயில் புகுந்திருக்கக் கூடிய பாக்டீரியாக்கள் வெளியேறி விடும்.
மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுபவர்களுக்கு, உடலுறவுக்குப் பிறகு உடனடியாக எடுத்துக்கொள்ளக்கூடிய ஆன்டிபயாட்டிக் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம்.
சிறுநீர் பாதை தொற்று எவ்வாறு கண்டறியப்படுகின்றது?சிறுநீர் பாதை தொற்றை கண்டறிவதற்கான "நீண்ட காலமாக செய்யப்படும்" பரிசோதனை, மிட் ஸ்ட்ரீம் யூரின் கல்சர் டெஸ்ட் (mid-stream urine culture test) ஆகும்.
இதில், நோயாளியின் சிறுநீர் மாதிரி ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கே, கல்சர் பிளேட் (culture plate) மூலம் எந்த கிருமி வளருகிறது என்று பார்க்கிறார்கள்.
இந்த முடிவின் அடிப்படையில், மருத்துவர் எந்த ஆன்டிபயாட்டிக் மருந்து (தேவைப்பட்டால்) சிறந்தது என்பதைத் தீர்மானிக்க முடியும்.
சில நிபுணர்கள்,சிறுநீர் பாதை தொற்றுக்கான இந்த கல்சர் பிளேட் காலாவதியானது என்றும், நோயாளியின் அறிகுறிகளையும் மருத்துவ வரலாற்றையும் மருத்துவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கிறார்கள்.
இந்த சிறுநீர் கல்சர் டெஸ்ட் 1950களில் விஞ்ஞானி எட்வர்ட் காஸ் உருவாக்கியது. அப்போது அவர், பைலோநெப்ரிடிஸ் (சிறுநீர் பாதை தொற்று) கொண்ட கர்ப்பிணிப் பெண்கள் தொடர்பான தரவின் அடிப்படையில் இதை வடிவமைத்தார்.
"நாம் அதே முறையைக் கொண்டு, கர்ப்பமாக இல்லாத பெண்கள், எல்லா வயதினருக்கும் பெண்கள், ஆண்கள், குழந்தைகள், இளைஞர்கள், என அனைத்து வகையான மக்களுக்கும் பயன்படுத்துகிறோம்," என்கிறார் மருத்துவர் காஸ்ரியா.
நீங்களும் உங்களுக்கு சிறுநீர் பாதை தொற்று இருப்பதாக சந்தேகித்தால், உடனடியாக மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
மீண்டும் மீண்டும் வரும் சிறுநீர் பாதை தொற்றை எவ்வாறு தடுப்பது?குறைந்தது ஒரு முறை சிறுநீர் பாதை தொற்று ஏற்பட்ட பெண்களில் 25% பேருக்கு மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, ஆறு மாதங்களில் இரண்டு முறை, அல்லது ஒரு வருடத்தில் மூன்று முறை ஏற்படலாம். பலருக்கு இதைவிட அதிகமாகக் கூட ஏற்படுகிறது.
க்ரான்பெரி சாறு ஆரோக்கியமான கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு மீண்டும் மீண்டும் வரும் சிறுநீர் பாதை தொற்றுகளை தடுக்க உதவும் என்பதற்கு சில சான்றுகள் இருந்தாலும், மற்ற சில ஆய்வுகள் இதில் எந்த நன்மையும் இல்லை என்று கூறுகின்றன.
சிறுநீர் பாதை தொற்றை தடுக்கும் வழிகள் : ( NHS பரிந்துரைகள்)
- கழிப்பறை பயன்படுத்திய பிறகு, பிறப்புறுப்பை முன்னிருந்து பின்னோக்கி துடைக்கவும்.
- பிறப்புறுப்பு பகுதியை சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் வைத்திருங்கள்
- நிறைய தண்ணீர் மற்றும் திரவங்கள் குடிக்கவும் இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கலாம்.
- உடலுறவுக்கு முன்னும் பின்னும் பிறப்புறுப்புப் பகுதியைச் சுற்றியுள்ள தோலை தண்ணீரில் கழுவவும்
- உடலுறவுக்குப் பிறகு கூடிய விரைவில் சிறுநீர் கழிக்கவும்
- நாப்கின்கள் அழுக்கடைந்தால் உடனே மாற்றவும்.
- பருத்தியிலான உள்ளாடைகளை அணியுங்கள்
பிரிட்டனில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் அண்ட் கேர் எக்ஸலன்ஸ் (NICE) பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் சிறுநீர் பாதை தொற்றுகளை தடுக்க, தினசரி குறைந்த அளவிலான ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பரிந்துரைக்கிறது.
நாள்பட்ட சிறுநீர் பாதை தொற்று என்றால் என்ன?மீண்டும் மீண்டும் ஏற்படும் சிறுநீர் பாதை தொற்றுகள் (Recurrent UTIs) மட்டுமல்ல, நாள்பட்ட சிறுநீரகத் தொற்றுகள் (Chronic UTIs) பற்றிய விழிப்புணர்வும் தற்போது அதிகரித்து வருகிறது.
இவை சில நேரங்களில் நீண்ட கால அல்லது உட்பொதிக்கப்பட்ட (Embedded) சிறுநீர் பாதை தொற்றுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இந்த நிலைமையில், மக்கள் தினமும் சிறுநீரகத் தொற்றின் அறிகுறிகளை அனுபவிக்கின்றனர். எரிச்சல், வலி, சிறுநீர் கழிக்கும் சிரமம் போன்றவை தொடர்ந்து ஏற்படலாம்.
ஒருவருக்கு மீண்டும் மீண்டும் ஏற்படுகின்ற தொற்று அல்லது நாள்பட்ட சிறுநீர் பாதை தொற்று, ஏன்,எப்படி உருவாகிறது என்பதை மருத்துவர் காஸ்ரியாவும் மற்ற ஆராய்ச்சியாளர்களும் கண்டறிய ஆர்வமாக உள்ளனர்.
"சிறுநீர் பாதை தொற்று குறித்து போதிய ஆய்வுகள் இல்லாததால், பல தகவல்கள் இல்லையென நாங்கள் நினைக்கிறோம். குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் குறித்து போதுமான ஆராய்ச்சிகள் இல்லை " என்று அவர் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு