திட்டமிடப்படாத நீண்ட விண்வெளி பயணம் மற்றும் அது கற்றுத்தந்த படிப்பினைகள் வாயிலாக ஏராளமானோரை சென்று சேர்ந்த நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் இன்று (செப். 19) தன் 60வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
பல மணிநேர விண்வெளி பயண அனுபவத்தைக் கொண்டுள்ள சுனிதா வில்லியம்ஸ் கூறிய பல வார்த்தைகளும் ஊக்கம் தரும் பேச்சுகளும் எந்த துறைக்கும் பொருந்தக்கூடியவையாகவே உள்ளன.
"நான் சிக்கிக்கொண்டதாக நினைக்கவில்லை. பூமி திரும்ப எப்போதும் ஒரு வழி இருந்தது."
தானும் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற ஸ்டார்லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, எட்டு நாள் விண்வெளி பயணம், 9 மாத பயணமாக மாறியது. திட்டமிடப்படாத இந்த பயணம் தந்த மன சோர்வு, உடல் சோர்வுக்கு மத்தியில் பூமி திரும்பிய பின் சுனிதா வில்லியம்ஸ் கூறிய நம்பிக்கையான வார்த்தைகள் இவை.
செப்டம்பர் 2024ல் தொடங்கிய இந்த பயணம், மார்ச் 18, 2025ல் தான் முடிவடைந்தது.
விண்வெளி பயணம் என்பது பெரும்பாலும் தனிமையை அதிகமாக உணரச் செய்யும். வீடு, குடும்பம், நண்பர்கள் என எல்லோரையும் பிரிந்து விண்வெளியில் இருக்கும்போது அதுதரும் மன அழுத்தம், சோர்வு என்பது தவிர்க்க முடியாததாகவே உள்ளது.
அத்துடன், விண்வெளியில் இருக்கும்போது எலும்பு பலவீனமடைதல், உடல் எடை குறைதல் என பல்வேறு உடல்நல பிரச்னைகளும் ஏற்படும். இதை எதிர்கொள்ள கடுமையான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டியிருக்கும். மன ரீதியிலான பிரச்னைகளை தாங்குவது தொடர்பாகவும் தீவிர பயிற்சிகள் ஏற்கெனவே அளிக்கப்பட்டிருக்கும்.
கடும் சவாலான பயணம்ஆனால், ஒரு சிறிய பயணம் திட்டமிடப்படாமல் நீளும்போது அதை எதிர்கொள்வதற்கு அசாத்திய மனபலம் தேவைப்படுகிறது. அதை பல தருணங்களில் சுனிதா வில்லியம்ஸ் வெளிப்படுத்தியிருந்தார். இந்த பயணம், சுனிதா வில்லியம்ஸுக்கு பரவலான சர்வதேச கவனத்தை ஈர்த்தது என்றே சொல்லலாம்.
பூமி திரும்புதல் தாமதமானதால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக காலம் தங்கி ஆய்வுகளைத் தொடர்ந்தனர். மேலும், ஸ்பேஸ் வாக் எனப்படும் விண்வெளி நடையிலும் அவர்கள் பலமுறை ஈடுபட்டனர். இந்த பயணத்தின்போது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் 900 மணி நேர ஆராய்ச்சி, 150 பரிசோதனைகளை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் மேற்கொண்டனர்.
இந்த பயணம் குறித்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் சமீபத்தில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடனான கலந்துரையாடலில் சிலவற்றை பகிர்ந்துகொண்டனர்.
அதில் பேசிய சுனிதா வில்லியம்ஸ், "அந்த பயணம் மிகவும் கடினமான சவாலாக இருந்தது. வெவ்வேறு விஷயங்களை எங்கள் வாழ்வில் பார்ப்பது குறித்து நாங்கள் அதிர்ஷ்டசாலிகளாக உணர்ந்தோம்." என குறிப்பிட்டார்.
இந்த பயணம் உண்மையில் சுனிதா வில்லியம்ஸின் தாங்குதிறன் மற்றும் நம்பிக்கை மீதான கடும் சோதனையாக இருந்ததை பல தருணங்களில் அவரே வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும், குழுவாக செயல்படுவது குறித்து இந்த பயணம் பலவற்றை கற்றுத் தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த பயணத்தில் பல விஷயங்களை கற்க வாய்ப்பு அமைந்ததையும் அவர் எப்போதும் கூறிவந்துள்ளார்.
அந்த 9 மாதங்களும் சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் பல காணொளிகள் வெளியாகின. அவை பெரும்பாலும் புன்னகையுடன், விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸின் மகிழ்ச்சியான தருணங்களை உலகுடன் பகிர்ந்துகொள்ளும் பொருட்டே இருந்தது. விண்வெளி குறித்த பல்வேறு தகவல்களை அந்த காணொளிகள் வாயிலாக சுனிதா பகிர்ந்துகொண்டார்.
கற்றுக்கொண்ட விஷயங்கள்"ஒருவர் சொல்வதை மற்றவர்கள் கேட்க வேண்டும். குழுவாக செயல்படுவதும் மிகவும் முக்கியம்" என, இந்த பயணத்தில் தான் கற்றுக்கொண்ட விஷயமாக குறிப்பிடுகிறார் சுனிதா வில்லியம்ஸ்.
குழுவாக செயல்படுதல் மற்றும் தொடர்ச்சியாக கற்றுக்கொள்ளுதல் ஆகியவை குறித்து இந்த விண்வெளி பயணம் வாயிலாக ஏராளமானோருக்கு சுனிதா வில்லியம்ஸ் ஊக்கம் அளித்துள்ளார் எனலாம்.
இந்த விண்வெளி பயணம் அவருக்கு ஓர் விண்வெளி வீரராகவும் தனிப்பட்ட முறையிலும் பல வாழ்வியல் அனுபவங்களை கொடுத்ததை அவருடைய பேட்டிகளின் வாயிலாக அறியலாம்.
அந்த பயணத்தில் தன்னுடன் இருந்த சக விண்வெளி வீரரான புட்ச் வில்மோர் மீதான நம்பிக்கை இன்னும் அதிகரித்ததாக சமீபத்தில் கூறியிருந்தார். 'பீப்பிள்' (people) இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், "அவர் எப்போதும் என்னுடைய சகோதரராக இருப்பார்" என சுனிதா வில்லியம்ஸ் கூறினார்.
இந்த பயணம் மூலம் பல்வேறு சாதனைகளையும் புரிந்துள்ளார் சுனிதா. விண்வெளியில் நீண்ட காலம் தங்கிய முதல் பெண்மணி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே அதிக மணிநேரம் செலவழித்த பெண் ஆகிய சாதனைகளை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார். இது சுனிதா வில்லியம்ஸின் மூன்றாவது விண்வெளிப் பயணம்.
"ஒவ்வொரு வாரமும் நான் குறிப்பு (journal) எழுதி, அதை என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்புவேன். அதன்மூலம், விண்வெளியில் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை அவர்கள் அறிவார்கள்" என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார் சுனிதா. அதுதான் விண்வெளியில் ஏற்படும் அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான ஒருவழியாக இருந்ததாக கூறுகிறார் சுனிதா.
யார் இந்த சுனிதா வில்லியம்ஸ்?அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள யூக்லிட் எனும் நகரத்தில் 1965ம் ஆண்டு பிறந்தார் சுனிதா வில்லியம்ஸ். இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் தீபக் பாண்டியா மற்றும் போனி பாண்டியா தான் இவருடைய பெற்றோர்.
குஜராத்தின் ஜுலாசன் கிராமத்தை சேர்ந்தவர் தான் அவருடைய தந்தை.
1972, 2007, 2013 ஆகிய ஆண்டுகளில் சுனிதா வில்லியம்ஸ் இந்தியாவிற்கு வருகை தந்தார். அந்த கிராமத்தில், சுனிதா வில்லியம்ஸ் பாதுகாப்பாக பூமி திரும்ப வேண்டும் என வேண்டி, பூஜைகளை நடத்தியதும் நம் நினைவில் இருக்கலாம். பூமிக்கு திரும்பியதும் விண்வெளியிலிருந்து இந்தியா மிக அழகாக இருப்பதாக கூறிய சுனிதா வில்லியம்ஸ், இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வது குறித்தும் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
அமெரிக்க கடற்படை கழகத்தில் இயற்பியல் அறிவியலில் இளநிலை பட்டம் பெற்றுள்ள இவர், பின்னர் ஃப்ளோரிடா தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியல் நிர்வாகம் பிரிவில் எம்எஸ்.சி பட்டம் பெற்றார்.
ஆரம்ப காலத்தில் அமெரிக்காவின் கடற்படையில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார் சுனிதா வில்லியம்ஸ். கடற்படையில் பணியாற்றியபோது, 30 வெவ்வேறு விதமான விமானங்களை செலுத்தியுள்ள சுனிதா வில்லியம்ஸுக்கு விமானியாக 3,000 மணிநேரம் அனுபவம் உள்ளது.
நாசாவின் இரண்டு விண்வெளி பயணங்கள் சுனிதா வில்லியம்ஸுக்கு மிக முக்கிய திருப்புமுனைகளாக அமைந்தன. அவை Expedition 14/15 மற்றும் Expedition 32/33 ஆகியவை.
Expedition 14/15 - 2006-2007ல் நடந்த இந்த பயணத்தின்போது, 29 மணிநேரம், 17 நிமிடங்கள் விண்வெளி நடை மேற்கொண்டு அந்த சமயத்தில் விண்வெளி வீராங்கனைகளில் இந்த சாதனையை புரிந்தவராக கருதப்படுகிறார். இந்த பயணத்தில் நான்கு விண்வெளி நடைகளை சுனிதா மேற்கொண்டார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் சென்ற முதல் பயணம் இதுவாகும்.
Expedition 32/33 2012ம் ஆண்டில் நடந்த இந்த விண்வெளி பயணத்தில் 127 நாட்கள் விண்வெளியில் கழித்தார் சுனிதா வில்லியம்ஸ்.
சுனிதா வில்லியம்ஸ் இதுவரை 62 மணிநேரம், 6 நிமிடங்கள் விண்வெளி நடையை மேற்கொண்டுள்ளார், நாசா வரலாற்றில் இவ்வளவு அதிக நேரம் விண்வெளி நடை மேற்கொண்ட நான்காவது விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் ஆவார்.
நாய்கள் மீதான காதல்சுனிதா வில்லியம்ஸும் அவருடைய கணவர் மைக்கேலும் தங்களது நாய்களுடன் விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது உள்ளிட்டவற்றை சேர்ந்து செய்வர். இதுதவிர, மலையேற்றம், கேம்பிங் போன்றவையும் சுனிதா வில்லியம்ஸுக்கு பிடித்தமான பொழுதுபோக்குகள். இவருடைய கணவர் மைக்கேல் வில்லியம்ஸ் ஹெலிகாப்டர் பைலட் ஆவார்.
சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பியபோது தனது கணவரை ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆனால், தன்னுடைய இரண்டு லேப்ரடார் நாய்களை பார்த்ததுதான் சிறந்த தருணம் என சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் சுனிதா.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வீட்டுக்கு சென்றவுடன் சுனிதா வில்லியம்ஸ் அந்த நாய்களுடன் விளையாடி, அளவளாவும் வீடியோவை தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார், அந்த காணொளி பல லட்சம் பார்வையாளர்களை ஈர்த்தது. நாய்கள் மீதான சுனிதாவின் பிரியத்திற்கு அந்தவொரு காணொளி சாட்சியாக இருக்கிறது.
அதைவிட, விண்வெளி துறையில் இவ்வளவு சாதனைகளை புரிந்த சுனிதா வில்லியம்ஸ், தான் கால்நடை மருத்துவராக வேண்டும் என எப்போதும் விரும்பியதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். "விலங்குகளுடன் வேலை செய்ய வேண்டும் என நான் நினைத்திருக்கிறேன். தெரியவில்லை, பார்ப்போம்."
அதேபோன்று அவருக்கு மலையேற்றம் செய்வதும் மிகவும் பிடிக்கும். பூமி திரும்பியதும் உடல் அதற்கு தகவமைத்துக்கொள்ள சிறிது அவகாசம் எடுக்கும். இப்போது தான் சிறிது மெதுவாக செயல்பட்டாலும், கணவர் மற்றும் நாய்களுடன் மலையேற்றம் செல்வதற்கு நேரம் செலவிடுவதை விரும்புவதாக சுனிதா கூறியிருக்கிறார்.
ஓய்வு பெறுகிறாரா?தான் ஓய்வு பெறுவதற்கு திட்டமிடுவதாகவும் சுனிதா வில்லியம்ஸ் 'பீப்பிள்' இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். எனினும், 'R' என்ற வார்த்தையை கூறுவது கடினம் என குறிப்பிடுகிறார் அவர். இங்கே, R என்பது ரிட்டையர்மென்ட்டை குறிக்கிறது.
1998 ஆம் ஆண்டிலிருந்து நாசாவில் பணியாற்றி வரும் சுனிதா வில்லியம்ஸ், தான் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்லவுள்ளதாக நாசாவிலிருந்து ஓய்வுபெறுவது குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார். இந்தாண்டின் இறுதியில் அதுகுறித்த அறிவிப்பு வரலாம் என்றும் அவர் அப்பேட்டியில் கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு