கங்கனா : ”என் உணவகத்தில் ரூ.50 தான் வியாபாரம் ஆனது” - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் புலம்பல்
Vikatan September 20, 2025 08:48 AM

இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத், தனது உணவகத்தில் ரூ.50 மட்டுமே வியாபாரம் ஆகுவதாக தனது சொந்த நஷ்டத்தைப் பற்றி மக்களிடம் புலம்பியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதி எம்.பி.யான கங்கனா ரனாவத், தனது தொகுதியில் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.

அப்போது மக்களிடம் பேசிய அவர், "எனது வலியையும் புரிந்து கொள்ளுங்கள். எனது உணவகத்தில் நேற்று ரூ.50 மட்டுமே வியாபாரம் ஆனது. ஆனால், நான் ஊழியர்களுக்கு சம்பளமாக ரூ.15 லட்சம் கொடுக்க வேண்டும்.

நானும் ஒரு இமாச்சலப் பெண் தான்" என்று பேசியிருக்கிறார். கங்கனா இந்த ஆண்டு தொடக்கத்தில் மணாலியில் "தி மவுண்டன் ஸ்டோரி" (The Mountain Story) என்ற பெயரில் உணவகத்தைத் தொடங்கினார்.

சுற்றுலாப் பயணிகளை பெரிதும் நம்பியிருக்கும் இப்பகுதியில், மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக அவரது உணவகத்தின் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கங்கனாவின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தியது. வெள்ளத்தால் மக்கள் தங்கள் வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் போது, ஒரு எம்.பி.யாக தனது சொந்த தொழில் நஷ்டம் குறித்துப் பேசுவது பொறுப்பற்ற செயல் என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.