சென்னை பெரம்பூர் லோகோ ரெயில் நிலையம் - கேரேஜ் ரெயில் நிலையங்கள் இடையே நேற்று முன்தினம் இரவு இரண்டு வாலிபர்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரெயில் மோதி தூக்கி வீசப்பட்ட இரண்டு வாலிபர்களும் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பெரம்பூர் ரெயில்வே போலீசார், பலியான இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் நடத்திய விசாரணையில் பலியான இருவரும், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராம்ஜித் யாதவ் மற்றும் பிஜிலி யாதவ் என்பதும், இவர்கள் பெரவள்ளூரில் உள்ள பிரபல ஓட்டலில் தங்கி, வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.