மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் ஒரு கணினி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சீதக்காதி நகரில் வசித்து வரும் இதயத்துல்லா மகன் முகமது அப்ரித் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கணினி மையத்திற்கு நீடூர் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர் பாஸ்போர்ட் பதிவு செய்வதற்காக சென்றிருக்கிறார். அப்போது மாணவியிடம் செல்போனில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என முகமது அப்ரித் கூறினார். அதன்படி மாணவி அந்த செயலியை தன் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டார்.
இதையடுத்து முகமது அப்ரித் செயலியின் வாயிலாக தனது செல்போனில் இருந்து மாணவியின் செல்போனை இணைத்து அவருக்கே தெரியாமல் தொடர்ந்து அவரை கண்காணித்து வந்தார். இந்நிலையில் செல்போனில் பல பிரச்சனைகள் ஏற்பட்டதால் மாணவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரின் படி வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, முகமது அப்ரித் மாணவியின் செல்போனில் பதிவிறக்கம் செய்த செயலியின் மூலம் அவரை கண்காணித்து வந்தது தெரியவந்தது. இதேபோல் மேலும் 3 மாணவிகளின் நடவடிக்கைகளையும் முகமது அப்ரித் கண்காணித்து வந்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முகமது அப்ரித்தை கைது செய்தனர். இவ்வாறு செல்போன் செயலி மூலம் வாலிபர் மாணவியை கண்காணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.