2025–26 கல்வியாண்டை நோக்கி, தமிழக பள்ளிக்கல்வித்துறை உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி தொடர்பான செயல்திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
மாணவர்கள் எதிர்கால கல்வி பாதையை திட்டமிடும் வகையில், அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதோடு, உயர்கல்வி சேர்க்கையையும் உறுதிசெய்யும் நோக்கத்தோடு இத்திட்டம் அமலாக்கப்படுகின்றது.
இதன் கீழ், உயர்கல்வி சார்ந்து சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களின் விவரங்களை ஆசிரியர்கள் எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் விவரங்களை முழுமையாக பதிவுசெய்ய வேண்டும் என்றும், பள்ளி தலைமை ஆசிரியர்கள் அடுத்த மாதம் அக்டோபர் 20-ம் தேதிக்குள் இவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை, மாணவர்களின் எதிர்கால உயர்கல்வி பயணத்தை வழிநடத்தும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.