மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட நபரை கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் போலீசில் சரண் அடைந்தார்.
சென்னை பெருங்குடி ரயில் நிலையம் அருகே உள்ள கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் பிளம்பர் அன்பு கணபதி ( 28). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜதுரை(30) என்பவரின் மனைவி மதுவுக்கும் கடந்த ஆறு மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இது ராஜதுரைக்கு தெரிய வரவே, அன்பு கணபதியை கூப்பிட்டு கண்டித்துள்ளார். ஆனாலும் அன்பு கணபதி திருந்திய பாடில்லை. இந்த நிலையில் நேற்று ராஜதுரை குடும்பத்தினரும்- அன்பு கணபதியின் குடும்பத்தினரும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அருகில் வசிப்பவர் என்ற முறையில் தான் ராஜதுரையின் மனைவியிடம் பேசினேன் என அன்பு கணபதி கூறியுள்ளார். இனிமேல் ராஜதுரையின் மனைவியிடம் பேசக்கூடாது என இரு குடும்பத்தினரும் அன்பு கணபதியை கண்டித்துள்ளனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் ராஜதுரை வீட்டுக்கு சென்ற போது அவருக்கும் அவரது மனைவி மதுவுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மது வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் வீடு திரும்பாததால் அன்பு கணபதியுடன் ஓடிவிட்டாரோ என்ற சந்தேகம் ராஜதுரைக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் அன்பு கணபதி, அவரது வீட்டில் தனது குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். ஒரு மணி நேரம் கழித்து மது வீட்டுக்கு திரும்பி உள்ளார். அப்போதும் ராஜதுரைக்கும் அவரது மனைவி மதுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த ராஜதுரை எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் அன்பு கணபதி தான் என நினைது, அவரது கதையை முடிக்க திட்டமிட்டார். அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த அன்பு கணபதியிடம், நடந்தது நடந்ததாக இருக்கட்டும்.. எல்லாவற்றையும் நான் மறந்து விட்டேன்.. மது அருந்தலாம் வா என அழைத்துள்ளார். தனது இரு சக்கர வாகனத்தில் ராஜதுரை, அன்பு கணபதியை ஏற்றிக்கொண்டு, பெருங்குடி ரயில் நிலையம் அருகே உள்ள கல்லுக்குட்டை கரைக்கு சென்றார். அங்கு இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.
போதை ஏறியதும் உனது மனைவியுடன் நான் இப்படி இருந்தேன். அப்படி இருந்தேன் என ராஜதுரையிடமே , அன்பு கணபதி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜதுரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அன்பு கணபதியை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பினார். ரத்த காயங்களுடன் தனது வீட்டை நோக்கி அன்பு கணபதி ஓடினார். அவரது உறவினர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அன்பு கணபதி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சடலத்தை கைப்பற்றிய துரைப்பாக்கம் போலீசார் பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை ராஜதுரை துரைப்பாக்கம் போலீசில் சரணடைந்தார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.