ஒரு கட்சித் தலைவருக்கு ஊடகங்களை எதிர்கொள்வது என்பது அடிப்படை தகுதி, அதை முதலில் விஜய் வளர்த்துக் கொள்ளட்டும் என நாகை விசிக எம்.எல்.ஏ. ஆளுர் ஷாநவாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாகை விசிக எம்.எல்.ஏ. ஆளுர் ஷாநவாஸ், “நாகையில் முழுக்க முழுக்க பொய் தகவல்களை தவெக தலைவர் விஜய் பரப்பிவிட்டு சென்றுள்ளார். அவதூறுகளை இட்டுக்கட்டிய பொய்களை விஜய் பேசுகிறார். பாஜகவினர் போல பொய் பேசுகிறார். அண்ணாமலை, ஆளுநர் ரவியை தொடர்ந்து அவதூறான இட்டுக்கட்டிய பொய்களை வாய்க்கு வந்ததை விஜய் பேச தொடங்கியுள்ளார். படத்துக்கு 6 மாதங்கள் கால்ஷீட் கொடுத்ததுபோல், அரசியலுக்கு தற்போது 6 மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளார் விஜய். அவரின் அரசியல் தமிழ்நாட்டு அரசியலுக்கு உகந்தது அல்ல.
விஜய் பரப்புரையின்போது மின்சாரத்தை டுண்டிக்க வேண்டும் என அவர் கட்சியின் மாவட்ட செயலாளர்தான் கடிதம் கொடுத்திருக்கிறார். ஆனால் அரசாங்கம் திட்டமிட்டு செய்வது போன்ற தோற்றத்தை விஜய் ஏற்படுத்துகிறார். முன்னுக்கு பின் முரணாக பொய்யை சொல்லி கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறார். விஜய் அரசியலை நேர்மையாக செய்யலாம். புதிய அரசியலை செய்யலாம். அதைவிட்டுவிட்டு ஏற்கனவே மண்ணில் இருந்து துடைத்து எறியப்பட வேண்டிய அரசியலான அவதூறு அரசியல், வன்ம அரசியலை விஜய் ஏன் கையில் எடுக்கிறார். திட்டங்கள் குறித்து எந்த ஆய்வும் செய்யாமல், எந்தவித அடிப்படை புரிதலும் இல்லாமல் வன்மத்தோடு பொய்யை சொல்ல வேண்டும் என சொல்லியிருக்கிறார்.” என்றார்.